கர்நாடகாவில் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதள கட்சியுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
 நடந்து முடிந்து நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியும்  தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பிறகு ஆளும் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீரப்ப மொய்லி கூட்டணி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.


 “கர்நாடகாவில் மஜதவுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டிருந்தால், 15 முதல் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கும். இது மறுக்கா முடியாத உண்மை. கூட்டணியை நம்பியதுதுதான் காங்கிரஸ் கட்சி செய்த தவறாகிப் போனது. நான் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியினரே என்னை எதிர்த்தார்கள். இதற்கு அதிகாரம் அல்லது பணம்கூட காரணமாக இருந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.


இதற்கிடையே கர்நாடகாவில் முழுக் காலமும் கூட்டணி ஆட்சி பதவியில் இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று மதசார்பற்ற ஜனதாதள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். “ஐந்து ஆண்டு காலமும் காங்கிரஸ் - மஜத ஆட்சி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு முன்பே கூட ஆட்சி கவிழலாம்” என்று தேவகவுடா தெரிவித்துள்ளார். 
ஒருபுறமும்  ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சந்தபர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் - மஜத தலைவர்களின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுவருகிறது.