சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வேண்டியது மிக முக்கியம் என்று திமுக மேலிடத்திற்கு பிரசாந்த் கிஷோர் டீம் கொடுத்த ரிப்போர்ட் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து பல்வேறு வியூகங்களை திமுக வகுத்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் வாக்கு வங்கி தொடர்பான கருத்துக் கணிப்பை பிரசாந்த் கிஷோர் டீம் திமுகவிற்காக எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அந்த வகையில் திமுக கூட்டணியில்தற்போதைக்கு அதிக வாக்கு வங்கி உள்ள கட்சியாக காங்கிரசை பிரசாந்த் கிஷோர் டீம் தூக்கிப் பிடித்துள்ளது. மேலும் நெகடிவ் வாக்குகள் எதுவும் இல்லாமல் காங்கிரசுக்கு பாசிடிவ் வாக்குகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர வட மாவட்டங்களில் விசிகவிற்கு வாக்கு வங்கி இருந்தாலும் அந்த கட்சி கூட்டணியில் இடம்பெறுவதை திமுக நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை என்றும் பிரசாந்த் கிஷோர் டீம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதே போல் மதிமுகவிற்கும் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை என்றும் அதனால் அந்த கட்சி கூட்டணியில் இடம்பெற்றாலும் ஒன்று தான் இடம்பெறவில்லை என்றாலும்ஒன்று தான் என்கிற ரீதியில் அறிக்கை இருப்பதாக கூறுகிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கணிசமான வாக்குகளை திமுகவிற்கு பெற்றுக் கொடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இது தவிர முஸ்லீம் கட்சிகள் தமமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் சிறுபான்மையினர் வாக்குகளை கவர அவசியம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த விஷயங்கள் எல்லாமே ஸ்டாலினுக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் ஸ்டாலினே எதிர்பாராத ஒரு விஷயம் பிரசாத் கிஷோர் டீம் கொடுத்த அறிக்கையில் உள்ளதாக சொல்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு மிக மிக முக்கியம் ஏனென்றால் அவர்களுக்கு 8 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கு வாய்ப்பு உள்ளது என்பது தான் பிரசாந்த் கிஷோர் கொடுத்த சர்வே ரிப்போர்ட்டின் மிக முக்கிய பகுதி என்கிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவக்கூடும். இந்த சூழலில் ஒவ்வொரு தொகுதியில் வெற்றி தோல்வியை சொற்பமான வாக்குகள் தீர்மானிக்க கூடும். எனவே கூட்டணியில் வாக்கு வங்கி இருக்கும் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிரசாந்த கிஷோர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாக சொல்கிறார்கள்.

எனவே காங்கிரஸ் கட்சியை கூட்டணியை விட்டு ஒரு போதும் செல்ல அனுமதித்துவிடக்கூடாது என்பது தான் பிரசாந்த் கிஷோர் கொடுத்த அறிக்கையின் சாராம்சம். இது ஸ்டாலினுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ரிப்போர்ட் என்கிறார்கள். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் பத்து தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டது. இதற்கு காரணம் சட்டமன்ற தேர்தலில் சொற்ப தொகுதிகளோடு காங்கிரஸ் ஒதுங்கிவிட வேண்டும் என்பது தான். எனவே கடந்த காலங்களை போல் அதிக தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் முரண்டுபிடித்தால் கழட்டிவிட்டுச் சென்றுவிடலாம் என்கிற முடிவில் கூட ஸ்டாலின் இருந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் காங்கிரசுக்கு வாக்கு வங்கி இருக்கிறது, காங்கிரஸ் என் கூட்டணியில் தொடர வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் டீம் கொடுத்த சர்வே ஸ்டாலினை குழப்பம் அடைய வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் காங்கிரசுக்கு நெகடிவ் ஓட்டுகள் எங்கும் கிடையாது. அந்த கட்சியை கூட்டணியில் வைத்திருப்பதால் பாதிப்பு இல்லை. அதே சமயம் பாமக போன்ற வாக்கு வங்கி உள்ள கட்சியை சேர்த்தால் தலித்துகள் திமுகவிற்கு வாக்களிக்க தயங்க கூடும். எனவே இந்த முறையும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க நேரிடுமோ என்று திமுக தற்போதே கலக்கம் அடைய ஆரம்பித்துள்ளது.