congress is the reason for himachal defeat said rahul

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த குஜராத் மற்றும் இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைத்தது. குஜராத்தில் தொடர்ச்சியாக 6வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத்தில், 182 தொகுதிகளில் 150 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால், வெறும் 99 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. ஆனால் கடந்த தேர்தலில் 61 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இந்தமுறை 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் கணிசமாக அதிகரித்திருந்தது.

ஆனால், அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த இமாச்சலை இழந்துவிட்டது. இமாச்சலில் உள்ள 68 தொகுதிகளில் 44 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளை மட்டுமே வென்றது. 

ஆட்சியில் இருந்த இமாச்சலில் தோல்வி அடைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். சிம்லாவுக்கு சென்ற ராகுல், கட்சி நிர்வாகிகள், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், தோல்வியடைந்த வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றதாக நிர்வாகிகள் ராகுலிடம் தெரிவித்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து உழைத்து காங்கிரஸ் கட்சியை கௌரவப்படுத்தியுள்ளனர். ஆனால், இமாச்சலில் நிர்வாகிகள் சண்டையிட்டுக்கொண்டு கட்சிக்கு தோல்வியை தேடித்தந்துள்ளனர். இமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காங்கிரஸ் தான் காரணம். கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் சகித்துக் கொள்ள முடியாது. முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் தெரிவித்தார்.