டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் 70 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு கடந்த 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் 62.59 வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பிறகு வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் அக்கட்சி 57 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி முதலில் 21 இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது அவை 13 ஆக குறைந்துள்ளது. இது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக நிலைமை இவ்வாறிருக்க, டெல்லியை இதற்கு முன்பாக ஆண்ட காங்கிரஸ் கட்சியின் நிலைமை அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.

மொத்தமிருக்கும் 70 தொகுதிகளிலும் அக்கட்சி எந்தவொரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை. டெல்லியில் காங்கிரஸ் கட்சி அதிகமுறை ஆட்சி அமைத்திருக்கிறது. கடைசியாக மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்ஷித் தலைமையில் கடந்த 1998 ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை அக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. 2013 க்கு பிறகு டெல்லியில் காங்கிரஸ் கட்சி அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முடிவுகளில் காங்கிரஸிற்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசுர பலத்துடன் அடிச்சு தூக்கும் ஆம் ஆத்மி..! பாஜக, காங். திணறல்..!