தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும், மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. இந்த அமர்வில் பெரும்பாலான நேரம் எதிர்க்கட்சிகளின்  தொடர் அமளி காரணமாக  நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றனர். 

இதனிடையே சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்  கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. ஆனால், அமளி காரணமாக அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில்  காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவையில்  மனு கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவை செயலாளருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே அளித்துள்ள கடிதத்தில், மத்திய அரசு மீது நாடாளுமன்றத்தில் 27-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.