நரேந்திர மோடியால் பிரதமருக்கான கடமைகளைச் செய்ய முடியவில்லை. அவரால் நாட்டின் நேரம்தான் வீணாகி வருகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தேசிய பழங்குடியினர் நடன திருவிழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மக்கள்தொகை பதிவேடோ, குடிமக்கள் பதிவேடோ இரண்டுமே ஏழை மக்கள் மீதான வரிச்சுமை. பண மதிப்பிழப்பின்போது நாம் வங்கியில் போட்ட பணத்தை எடுக்கக் கூடாது என்று கூறினார்கள். ஆனால், அந்தப் பணமெல்லாம் 15-20 பெரும் பணக்காரர்களுக்குப் போனது. 
அதுபோலத்தான் தேசிய மக்கள்தொகை பதிவேடும். ஏழை மக்கள் அதிகாரிகளை நாடி சென்று ஆவணங்களை காட்ட வேண்டும். அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். தங்கள் பெயரில் சிறு பிழை இருந்தால்கூட அதை சரிக்கட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி வரும். இதற்கு கோடிக்கணக்கான ரூபாயை ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்து எடுத்து பணக்காரர்களின் பாக்கெட்டுக்கு போகும். இது உண்மை. எனவே இது ஏழை மக்கள் மீதான தாக்குதல்.
இந்தியா வன்முறையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை, வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது என்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடிக்கு இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரால் பிரதமருக்கான கடமைகளை செய்ய முடியவில்லை. அவரால் நாட்டின் நேரம்தான் வீணாகி வருகிறது.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.