இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையைப் பற்றி பேசினால், நிலாவை பாருங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது என்று மோடி அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கு அக்டோபர் 21 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  
லத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து பேசினார். “மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக கார்பெட் பார்க், சீனா, பாகிஸ்தான், ஜப்பான், கொரியா பல்வேறு வேலைகளில் மோடியும் அமித் ஷாவும் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருவரும் அமைதி காத்து வருகிறார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ காங்கிரஸ் ஆட்சியில்தான் நிறுவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகளை அனுப்ப பல ஆண்டுகள் சோதனைகள் தேவைப்பட்டன. தற்போது இஸ்ரோவில் நடக்கும் நன்மைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் பிரதமர் மோடி.
நிலாவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதால் நாட்டில் உள்ள ஏழைகளின் வயிறு நிறைந்துவிடுமா? அவர்களுக்கு உங்களால் உணவு அளிக்க முடியாது. இதுபோன்ற  திட்டங்கள் இளைஞர்களின் பசியை முடிவுக்கு கொண்டு வராது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையைப் பற்றி பேசினால், நிலாவை பாருங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.”என்று காட்டமாக விமர்சித்தார் ராகுல்.
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் ஒரே நாளில் போட்டிப் போட்டுகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.