’சிவகங்கையை சிதம்பரம் வென்றிருக்கின்றார். காங்கிரஸ் தோற்றிருக்கின்றது’ என முன்னாள் காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன் விமர்சித்துள்ளார்.

ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் சிவகங்கை தொகுதியை தனக்கு விட்டுக்கொடுக்கமாறு காங்கிரஸ் முக்கியத் தலைவரான சுதர்சன நாச்சியப்பன் கேட்டு வந்தார். காங்கிரஸ் மேலிடமும், சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க தயக்கம் காட்டி வந்தது. இதனால் அந்த தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் காலதாமதம் ஏற்பட்டது. சுதர்சன நாச்சியப்பன் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

இதுகுறித்து இலக்கியவாதியும், காங்கிரஸ் கட்சியின் தலை சிறந்த பேச்சாளராகவும் இருந்த நெல்லை கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘’சிவகங்கையை சிதம்பரம் வென்றிருக்கின்றார். காங்கிரஸ் தோற்றிருக்கிறது. யாரையும் மதிக்காத அகம்பாவத்தின் உச்சியில் இருக்கின்ற நாகரீகமே தெரியாத யாரையும் வணங்க விரும்பாத வயதில் மிகப் பெரியவர்களையும் பெயர் சொல்லி அழைக்கின்ற தன் மகனை திருத்தாமல் மக்களவைக்கு அனுப்ப நினைக்கின்ற சிதம்பரம் மக்களை அவமதித்திருக்கின்றார்.

சுதர்சன நாச்சியப்பன் சிதம்பரத்தையே தோற்கடித்தவர். அவருக்கு தந்திருக்கலாம். இல்லையெனில் சிதம்பரத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கின்ற கே.எஸ்,அழகிரியைக் கூட நிறுத்தியிருக்கலாம். தமிழினத்தின் எந்தப் பண்பாடுகளும் இல்லாத மகனுக்கு தன் செல்வாக்கை வைத்து இந்த இடத்தை வாங்கிய சிதம்பரம் பலனை அனுபவிப்பார். பணம் காப்பாற்றாது’’ என அவர் தெரிவித்து இருக்கிறார்.