கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை அளிக்க காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
 நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடிவருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளையும், கருத்துகளைத் தெரிவிக்கவும் காங்கிரஸ் கட்சி குழு ஒன்றை அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ள இக்குழுவின் தலைவராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் குழுவில் 10 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.


ராகுல் காந்தி, ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், மணீஷ் திவாரி, வேணுகோபால் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். இக்குழு  கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தினமும் ஆலோசனை நடத்தி, அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசுக்கு தெரிவிக்க உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கருத்தாக இக்குழுவே தகவல்களை வெளியிடும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.