பாஜகவுக்கு மாற்றாக, காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாத சூழலில், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று இல்லாதது போல் இருக்கும் நிலை போன்று மத்தியிலும் உருவாகிவிடுமோ என்ற ஐயம் மெல்லத் தலை தூக்கி இருக்கும் காலக் கட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி, புதுடெல்லியைத் தாண்டி பஞ்சாப்பில் அடி எடுத்து வைத்து இருப்பது வரவேற்கத்தக்கதே. 

நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கும் காங்கிரஸ், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், இதே வேகத்தில் பயணிக்குமானால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பிட ஓர் அரசியல் சக்தி தேவைப்படுகிறது என்று காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழருவி மணியனை தலைவராகக் கொண்ட காந்திய மக்கள் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பஞ்சாப் தவிர மீதமுள்ள மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள சூழலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது; கோவாவிலும், உத்தரகாண்டிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் வலுவான போட்டியைத் தரும் என்ற நம்பிக்கை சிதைந்து போயிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட முறை 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதை' தான்.

'காங்கிரஸ் தலைமைக் குடும்ப வாரிசுகளின் முதிர்ச்சியற்ற அணுகுமுறை' என்று முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் குறிப்பிட்டிருந்ததை நிரூபித்துக் காட்டியிருக்கிறது பஞ்சாப் முடிவுகள். ஆந்திரா தொடங்கி பல மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்து போனதற்குக் காரணம், தலைமைக் குடும்பத்தின் தவறான அணுகுமுறைகள்தான். காங்கிரஸின் தொடர் தோல்விகள், பாஜகவுக்கு எதிரான அணிக்குத் தலைமை வகிக்கும் தகுதியை, அதனிடம் இருந்து பறித்துக் கொண்டே வருகின்றன. இனிமேலும் அந்தக் கட்சி, இந்திய அரசியலில் ஏற்புடையதாக இருக்க வேண்டுமானால், குடும்பப் பிடியிலிருந்து வெளியே வர வேண்டும்.

பாஜகவுக்கு மாற்றாக, காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாத சூழலில், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று இல்லாதது போல் இருக்கும் நிலை போன்று மத்தியிலும் உருவாகிவிடுமோ என்ற ஐயம் மெல்லத் தலை தூக்கி இருக்கும் காலக் கட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி, புதுடெல்லியைத் தாண்டி பஞ்சாப்பில் அடி எடுத்து வைத்து இருப்பது வரவேற்கத்தக்கதே. புதுடெல்லியில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியைத் தருவதாக, மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் பிம்பம், பஞ்சாபில் காங்கிரஸ் மீது வெறுப்படைந்த மக்களுக்கு மாற்று வழியைக் காண உதவியிருக்கிறது.

சிறுசிறு மாநிலங்களில் தன்னுடைய கிளையைப் பரப்பத் தொடங்கியிருக்கும் ஆம் ஆத்மியின் முயற்சி, இந்தியா முழுவதும் வேர் பிடிக்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கும் காங்கிரஸ், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், இதே வேகத்தில் பயணிக்குமானால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பிட ஓர் அரசியல் சக்தி தேவைப்படுகிறது என்பதை காந்திய மக்கள் இயக்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது. அந்த இடத்தை அடைந்திட ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு இருக்கிறது. காலதேவனின் போக்கினை, கவனித்துக் கொண்டே இருப்போம்.” என்று அறிக்கையில் காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கட்சி அல்லது கூட்டணியை உருவாக்க ஆர்வம் காட்டியவர் தமிழருவி மணியன். 2014-இல் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக-தேமுதிக-மதிமுக-பாமக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவானதில் பங்கு வகித்தார். இதேபோல திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவரவும் தமிழருவி பெரிதும் முயன்றார். இப்போது தேசிய அளவில் மாற்றுக்கட்சியாக ஆம் ஆத்மி வரும் என்ற எண்ணத்தை தமிழருவி மணியன் தலைமை வகிக்கும் காந்திய மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது.