ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து சேலத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி முதல் நாள் தோறும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் அஞ்சல் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அஞ்சல் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர். அப்பொழுது அங்கு இருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.