கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டதுபோல ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிவருகிறது. இதற்காக ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரிடம்  கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக அக்கறை காட்டிவருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் புகார் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “கொரோனா தொற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஆயிரக்கணக்காணோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலையில்லை. மாறாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதை முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. ராஜஸ்தானில் கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்யவிடாமல், ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது.


கர்நாடகா, மத்தியப் பிரதேசம் பாணியில் ராஜஸ்தானிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தீவிரமாக உள்ளது. இந்தத் தீவிர பாஜக கொரோனா ஒழிப்பில் காட்டினால் நல்லது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணம் கொடுக்க மத்திய பாஜக அரசிடம் பணம் இல்லை. சுகாதாரப் பணியாளர்களுக்கு தரமான உபகரணங்கள் வழங்க பணம் இல்லை. ஆனால், ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவிடம் ஏராளமாக பணம் இருக்கிறது. இந்தப் பணமெல்லாம் எங்கிருந்து வருகிறது?” என்றும் கே.சி. வேணுகோபால காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.