தமிழகத்தில் பாஜக சார்பில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பாஜக நடத்தும் இந்த யாத்திரை மூலம் கட்சியைப் பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுவதும் ஏர் கலப்பை பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் நடக்கும் விவசாய பேரணிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று வருகிறார்.


இந்நிலையில் ஏர் கலப்பை என்ற பெயரில் தமிழகத்தில் விவசாய பேரணியை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகம் முழுவதும் நடைபெறும் ஏர் கலப்பை ஊர்வலங்களின் இறுதியில் மாநில அளவில் நடைபெறும் விவசாயிகளின் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  பங்கேற்க இருக்கிறார்.


ராகுல்காந்தி பங்கேற்கிற விவசாயிகள் பேரணி தமிழகத்தின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் அமையும். தமிழகம் முழுவதும் எந்த தேதியில் ஏர் கலப்பை ஊர்வலம் தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.” என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் பலத்தைக் காட்டத் தயாராகிவருகின்றன.