மந்தமாக இருந்த தமிழக அரசியல் களத்தை வெறும் ஒன்பது நிமிடங்களில் பதற்றம் அடைய வைத்துள்ளார் வைகோ.

கடந்த திங்களன்று காலையில் திடீரென பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் வைகோ. காஷ்மீர் விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் வைகோவை சந்திக்க மோடி சுமார் 30 நிமிடங்கள் ஒதுக்கினார். இது அப்போதே அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தான் நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீரை பிரித்து யூனியன் பிரதேசங்கள் ஆக்கும் மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்தார்.

 

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது முதலில் பேச வைகோவுக்கு 2 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய வைகோ நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடப்பதாக சீறினார். பிறகு வைகோவின் மைக் ஆப் செய்யப்பட்டது. ஆனால், பிறகும் வைகோ தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அமித் ஷா அவைத் தலைவரிடம் வைகோவை பேச அனுமதியுங்கள் அவர் என்ன பேசுகிறார் என்று நாங்கள் கேட்க ஆவலாக இருப்பதாக கூறினார். உடனே வைகோவுக்கு பேச அனுமதி வழங்கப்பட்டது. அப்போது காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த சூழலை மிகவும் அற்புதமாக விவரித்தார் வைகோ. மேலும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல அது இணைந்த பகுதி என்று வைகோ பேச பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

அப்போது திடீரென தனது பேச்சை காங்கிரஸ் மீதான தாக்குதலாக மாற்றினார் வைகோ. காஷ்மீர் விவகாரத்தில் முதல் துரோகம் செய்ததே காங்கிரஸ் தான் என்று தெரிவித்து வைகோ பேசிய பேச்சின் போது மாநிலங்களவை கப் சிப் என்று இருந்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து தற்போது பறிக்கப்பட்டாலும் அதற்கு காரணம் காங்கிரஸ் தான். காங்கிரஸ் கட்சி தான் காஷ்மீரிகள் முதுகில் குத்தியது என்று கூறி சில வரலாற்று உண்மைகளை புட்டு புட்டு வைத்தார். 

இது போதாது என்று நேற்று முன்தினம் சென்னையில் பேசிய போதும் காங்கிரஸ் கட்சி நம்பத்தகுந்தது அல்ல என்று கூறி அதிர வைத்தார். இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபமாக வெடித்தது. முதலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வைகோவை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்தார். துரோகி நம்பர் ஒன், கள்ளத் தோணி நாயகன் என்று அவர் வைகோவை வறுத்தெடுக்க விவகாரம் சூடு பிடித்தது. 

இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை இந்த விவகாரத்திற்கு அரசியல் ட்விஸ்ட் கொடுத்தது. வைகோ ஒரு பச்சோந்தி என்றும் அவர் என்றுமே யாருக்கும் நம்பிக்கையாக இருந்தது இல்லை என்றும் கலைஞரை பலமுறை முதுகில் குத்தியவர் வைகோ என்றும் அறிக்கையில் சீற்றம் இருந்தது. 

மேலும் 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக வென்று ஸ்டாலின் முதலமைச்சராகிவிடக்கூடாது என்பதற்காகவே மக்கள் நலக் கூட்டணியை வைகோ கட்டமைத்ததாகவும் ஒரே போடாக போட்டிருந்தார் அழகிரி. இதற்கு வைகோ பதில் சொல்லும் போது காங்கிரஸ் கட்சி ஒரு இனத்தையே அழித்தவர்கள் என்று கூறியிருந்தார். இப்படி இந்த விவகாரம் தமிழக அரசியலை சூடாக்கியுள்ள நிலையில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன.

 

வைகோ டெல்லி செல்லும் முன்பு வரை இப்படி காங்கிரசை விமர்சிக்கவில்லை. ஆனால் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்த பிறகுமாறிவிட்டார். இதில் ஏதோ அரசியல் ஆடுபுலி ஆட்டம் உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது தான் அமித் ஷாவின் வியூகம். இதற்கு பக்கபலமாக வைகோ இருப்பது போல் தெரிகிறது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. இதே போல் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை, வைகோ மூலமாக கூட்டணியில் இருந்து காங்கிரசை விரட்ட வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.