எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு , ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆகியோருக்கிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அப்போது, தி.மு.க., தலைமையில் உருவாகும் மதச்சார்பற்ற கூட்டணியில், மாநில கட்சிகள் அதிகமாக இடம்பெற இருப்பதால், தேசிய கட்சியான காங்கிரசுக்கு, ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்க முடியும் என , தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்த ஒற்றை இலக்க தொகுதி ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டால் அக்கட்சி வேட்பாளர்களுக்கு, தலா, 15 கோடி ரூபாய் வரை, செலவு செய்யப்படும்' என, தி.மு.க., தரப்பில், வாக்குறுதி தரப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் குற்றாலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, 'தி.மு.க., கூட்டணியில், அவசரப்பட்டு சேர்ந்து விட வேண்டாம்; 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்புக்கு பின், தமிழக அரசியலில் மாற்றம் நிகழும்; அதுவரை பொறுத்திருங்கள்' என, அவர் கேட்டுக் கொண்ட தகவலும், காங்கிரஸ் வட்டாரத்தில் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி தற்போது தனி ட்ராக்கில் போவதால் அதன் கூட்டணி கட்சியான திமுக கடும் அதிருப்தியில் .உள்ளதாக தெரிகிறது.