தமிழகத்தை பொறுத்த வரை ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த குடிநீர் பிரச்னை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, தண்ணீர் பிரச்னையில் நிரந்தர தீர்வை தமிழக அரசு எடுக்கவில்லை எனவும், காவிரியில் இருந்து தண்ணீரை முறைப்படி பெறவில்லை எனவும் பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ’’காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும். காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகாவில் பேசினார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. 

அது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் யாராவது வலியுறுத்தினீர்களா? நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டதால் தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பினும் தமிழகத்தில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து வழங்கப்படுகிறது’’ என அவர் பதிலளித்தார். அடுத்து பேசிய ராமசாமி, ’’கர்நாடகாவிலிருந்து தண்ணீரை பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை. நாங்களும் வருகிறோம் அனைவரும் சேர்ந்து கர்நாடக அரசிடம் பேசுவோம்’’ என தெரிவித்தார்.