எல்லாமே முடிந்து விட்டது. இனி இரு அணிகளும் இணைய வேண்டியதுதான் பாக்கி என்பது போல்தான் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், பன்னீர் அணியினர் கூறுவதை கேட்டால், தினகரனை வெளியேற்றியதாக அறிவித்திருப்பது, ஒரு நாடகம் என்றே தோன்றுகிறது.

சசிகலா குடும்பம் அல்லாத அதிமுக என்றால், முதலில், சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் குடும்ப உறவுகளில் 30 பேரையும் நீக்கி அறிக்கை வெளியிட வேண்டும்  என்று பன்னீர் தரப்பு வலியுறுத்துகிறது.

மேலும் தேர்தல் ஆணையத்தில், ஆளும் தரப்பால் தாக்கல் செய்த பிராமண பாத்திரத்தில், கட்சியின் பொது செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டுள்ளதால், அந்த பிராமண பாத்திரத்தை வாபஸ் பெற வேண்டும். 

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டு என்று பன்னீர் தரப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆனால், உப்பு இருக்கிறதா என்றால், சர்க்கரை இருக்கிறது என்று கூறுவது போல, எடப்பாடி அணியை சேர்ந்தவர்களின் பதில் இருக்கிறது.

எடப்பாடி அணியை சேர்ந்த வைத்திலிங்கம் கூறும்போது, சசிகலாவையும், தினகரனையும். விலகும்படி நாங்கள் வலியுறுத்தியதை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

சசிகலா பொது செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ள பிராமண பாத்திரம் தற்போது தேர்தல் ஆணையத்தில் உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற விதி முறைகளுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது என்று கூறி இருக்கிறார்.

இதன் மூலம், பன்னீர் அணி விதிக்கும் நிபந்தனைகளுக்கு, எடப்பாடி தரப்பில் இருந்து, பதில் மட்டுமே இருக்கிறதே ஒழிய, செயல் இல்லை. அதனால், அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து சுணக்கம் இருந்து  வருகிறது.