சேலத்தில் 8 வழி சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. விவசாய நிலங்கள் குடியிருப்புகள் இந்த சாலைக்காக கையகப்படுத்தப்படுவதால் அப்பகுதி மக்கள் கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் மாவட்டம் கூமாங்காடு பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்தார். அவருடன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன், மகளிர் பாசறை தலைவர் ஜானகியம்மாள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் அங்கு சென்றிருந்தனர். அவர்களில் சீமானை மட்டும் காவலர்கள் அழைத்து சென்றனர். இந்நிலையில் முன் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக சீமானை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை இதுபோன்ற காரணத்திற்காக காவல்துறை கைது செய்திருந்தது. மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாக காவல்துறை குற்றம்சாட்டி பாலபாரதியை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.