வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கடும் சிரமத்தினை ஏற்படுத்தும் சுங்க கட்டண உயர்வை அரசு உடனே திரும்ப் பெற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.  இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:-  

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்ட ஊரடங்கால் நாட்டின் அனைத்துத்தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல்  சுங்க கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.  ஊரடங்கினால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு மக்களில் பெரும்பாலானோர் வேலையிழந்து வருமானமிழந்து தவித்து வருவதாக ஆய்வு முடிவுகள் வெளிவரும் சூழலில் பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது மேலும் ஒரு சுமையாக இந்த சுங்க கட்டண உயர்வு சுமத்தப்படுள்ளது. 

ஊரடங்கை முன்னிட்டு மார்ச் 25 முதல் ரத்து செய்யப்பட்ட சுங்க கட்டண வசூல் மீண்டும் ஏப்ரல் 20 முதல் தொடங்கப்பட்டதையே, பல்வேறு தரப்பினரும் திரும்ப பெற வலியுறுத்தி வரும் நிலையில் கட்டண உயர்வு என்பது மேலும் கடும் பாதிப்புகளை உருவாக்கும். பேருந்து மற்றும் ரயில் சேவைகளை அரசு தடை செய்துள்ளமையால் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக வாடகை கார்களை பயன்படுத்தும் அடித்தட்டு மக்கள் மேலும் பாதிக்கப்படுவர். போக்குவரத்து செலவில் சுமார் 20% சுங்க கட்டணமே செலவு செய்யப்படும் நிலையில் இத்தகைய கட்டண உயர்வு அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கு நேரடி காரணியாக அமையும். 

பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்களின் நேரடி பாதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சுங்க கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக திரும்ப பெற வேண்டும், அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்யும் வகையில் உடனடி நிவாரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சுங்க கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு வாகன உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருவதையும் மத்திய அரசு முறையாக பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.