துணை மேயருக்கு இரண்டாம் வரிசை...மேயருக்கு 3 ஆம் வரிசையா..? அரசு நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்படுகிறாரா பிரியா..
தமிழக அரசு நிகழ்ச்சிகளில் அந்த அந்த பகுதி மேயருக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டு வரும் நிலையில், சென்னை மேயரை அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிப்பதாகவும், முன்னுரிமை கூட அளிப்பதில்லையென்ற புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேயர் பிரியா
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 95% இடங்களை கைப்பற்றியது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. இந்தநிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பதவி இடத்தை தற்போது தமிழக முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக செயல்படுத்தினார்கள். எனவே சென்னை மாநகராட்சிக்கு அதே போல ஆளுமை மிக்க ஒருவரை மேயர் பதவிக்கு கொண்டுவர இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு முதல் பெண் மேயர் என அறிவிக்கப்பட்டு அமைச்சர் சேகர்பாபுவின் பரிந்துரையின் அடிப்படையில் பிரியா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புறக்கணிக்கப்படுகிறாரா சென்னை மேயர்
இதனை தொடர்ந்து துணை மேயராக திமுகவின் மூத்த நிர்வாகி மகேஷ்குமார் நியமிக்கப்பட்டார். மாநகராட்சியின் ஆரம்ப கட்டத்தில் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை மேயர் பிரியாவிற்கு வழங்கினார்கள். இதனை தொடர்ந்து திமுக மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா ஆர்வமோடு கலந்து கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் மேயர் பிரியா காலதாமதமாக வந்த நிலையில் மேடையில் ஓரமாக அமரவைக்கப்பட்டார். இதே போல கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது சென்னை மாநகர மேயர் பிரியா சட்டமன்ற உறுப்பினர்களோடு 3வது வரிசையில் அமர்ந்து இருந்தார். துணை மேயர் மகேஷ் குமார் 2 ஆம் வரிசையில் அமர்ந்து இருந்தார். இந்த காட்சி சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பாக பேசப்பட்டது. சென்னை மேயருக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையென்ற புகாரும் வெளியானது.
உதயநிதிக்கு முக்கியத்துவம்
ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக வெளியான காட்சி பரபரப்புக்குள்ளான நிலையில், சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் மேயருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மேயருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தவர். திமுக ஒரு குடும்ப கட்சியென்றும், எந்தவித பொறுப்பும் இல்லாத சட்டமன்ற உறுப்பினராக மட்டும் உள்ள உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக விமர்சித்து இருந்தார்.
இதையும் படியுங்கள்