பீலா ராஜேஷ் மீதான சொத்துக்குவிப்பு புகார் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறை திட்ட இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2020 பிப்ரவரி 17 வரை தமிழக சுகாத்தார துறை செயலாளர் பதவியில் இருந்தார்.

கொரோனா பாதிப்பு குறித்து தினசரி அப்டேட்களை ஊடகங்களுக்கு வழங்கியதன் மூலம் பிரபலம் ஆனார். எனினும் சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாகவும், வேறு சிலக் காரணங்களாலும் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே பீலா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல கோடி ரூபாய் மதிப்பில் பண்ணை வீடு கட்டியதாகவும் பீலா ராஜேஷ் மீது புகார்கள் வந்தது. இந்த சூழலில் அவர் வாங்கிய 6 சொத்துகளை குறிப்பிட்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் செந்தில் குமார் என்பவர் அளித்த இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான கடித்ததை மத்திய அரசு அனுப்பியுள்ளது