இந்திய தேசிய கொடியின் மாண்பிற்கு களங்கம் விளைவித்து, அவமரியாதை செய்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பனங்காட்டு படை கட்சியின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவை அந்த கட்சி அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 

ஹரி நாடார் ஆகிய நான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேசிய கீதம் முழங்க தேசிய கொடி ஏற்றி நாடெங்கும் 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நான் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் இன்றி தேசியக்கொடி ஏற்றியது மட்டுமின்றி, தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசியக்கொடிக்கு செலுத்தவேண்டிய உரிய மரியாதையான "சல்யூட்" செலுத்தாமல் கடமைக்காக ஏற்றிவிட்டு, 

திரும்பி நடந்து சென்று தொண்டர்களிடம் கைகூப்பி விட்டு கடந்து சென்றதை நான் தொலைக்காட்சியில் கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானேன், இது இந்திய மக்கள் அனைவர் மத்தியிலும் மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்திய இறையாண்மைக்கும், இந்திய அரசிற்கும், அவமரியாதையை ஏற்படுத்தும் விதமாகவும், தேசிய கொடியை அவமதிக்கும் விதமாகவும், அவரது நடத்தை இருந்ததனால் அவர் தேசத் துரோகம் செய்துள்ளதாக கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுத்து உடனே கைது செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.