தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஒன்றிய செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்து, அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் மணிகண்டன் அமைச்சராக பதவியேற்றது முதல், அவருக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்டத்தில் அவருக்கு எதிராக புகார்கள் கிளம்பின. ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள், எதிர்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக புகார்கள் எழுந்தன. அது மட்டுமல்லாது, சொந்த கட்சியினரும் அவர் மீது புகார் எழுப்பி வருகின்றனர்.

 

ராமநாதபுரம் எம்பி அன்வர் ராஜாவை மேடையிலேயே திட்டியது; ஆட்சியர் நடராஜனை திட்டியது உள்ளிட்ட அமைச்சரின் நடிவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றிய செயலாளர்களில் 9 பேர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திது, அமைச்சர் மணிகண்டன் பற்றி புகார் கூறினர்.

அது மட்டுமன்றி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து ஒப்பந்த வேலைகளிலும் 30 சதவிகித கமிஷன் கேட்பதாகவும், அவரது தந்தை முருகேசனின் தலையீடு அதிகமாக உள்ளது என்றும் புகாரில் கூறியுள்ளன. மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல் அரசு அதிகாரிகளை மோசமாக திட்டுவதாகவும், இதனால் மக்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் புகார் கூறியுள்ளனர். அமைச்சர் பதவியில் இருந்து
மணிகண்டனை நீக்கினால்தான், மாவட்டத்தில் கட்சி நிலைக்கும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.