Complaint against actor Vishal - producer Suresh Kamaski

தயாரிப்பாளர் சங்கத்துக்கு சொந்தமான ரூ.3.40 கோடியை நடிகர் விஷால், கையாடல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புகார் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் அதில் வெற்றியும் பெற்றார். அண்மையில் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, போட்டியிடுவதற்காக விஷால், வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் சொத்துக்கணக்கு உள்ளிட்டவைகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று அவரது மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனாலும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், நடிகர் விஷால் தரப்புக்கும், சேரன் தரப்புக்கும் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது சேரன், டி.ராஜேந்தர் உள்ளிட்டவர்கள் கடும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் விஷால் மீது பணம் கையாடல் தொடர்பாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தயாரிப்பாளர் சங்க பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால். ஆனால் உண்மையில் சங்க பணமான 3 கோடியே 40 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் நிரந்தர வைப்பு தொகையாக போடப்பட்ட 7 கோடியே 40 லட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை. விஷாலும் இதையேதான் ராகவேந்திரா மண்டபத்தில் மீடியா முன்பு சொன்னார். எஃப்.டி. பணம் எந்த விதத்திலும் எடுக்கப்படாது. அப்படியே இருக்கும் என்றார்.

அவர் சொன்னபடி நடந்திருந்தால் அரையாண்டு கணக்கை சமர்ப்பித்திருக்கலாமே? ஏன் சமர்ப்பிக்கவில்லை நியாயமாரே? கணக்கு எங்கே எனக்கேட்டால் தேசியகீதம் பாடி கூட்டத்தை முடிக்கலாம்னு நேற்றுதான் தெரிஞ்சிக்கிட்டோம். உண்மையானவர்கள் என்றால் கணக்கு வழக்கை பிரதியெடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்திருந்தால் ஏன் இந்த சத்தம்? சங்கடங்கள் எல்லாம். 

உண்மை இருந்தால்தானே கொடுப்பதற்கு? கூச்சல் போடுறாங்க.. திட்றாங்கன்னு வீடியோ எடுத்து அனுப்புறீங்க. ஏம்பா உன் வீட்டுல ஒரு இலட்ச ரூபா காணாமல்போனாலே லபோ திபோன்னு கத்தமாட்டே? ஆனா இங்கே வருடக்கணக்காக காப்பாற்றி வந்த 7.40 கோடியில் 3.40 கோடியைக் காணோம்னா கூப்பிட்டு வச்சு கொஞ்சவா செய்வாங்க. திருடனா இருந்தா என்ன செய்வீங்க? நடுத்தெருவுல கம்பத்துல கட்டி வச்சி போறவன் வர்றவன்லாம்
அடிக்கமாட்டீங்க? பதவிங்கிற பேர்ல கொள்ளையடிச்சவனை நாங்க எப்படி நடத்தணும்னு எதிர்பார்க்கிறீங்க மக்களே? 

ரூ.3 கோடியே 40 லட்சத்தை கையாடல் பண்ணியிருக்காங்கன்னு நான் நிரூபிக்கிறேன். அவர்தான் எடுக்கவில்லை என்பதை மீடியா முன் நிரூபிக்கத் தயாரா? தான் எடுக்கவில்லை என நிரூபித்தால் நான் சங்கத்தை விட்டு விலகத் தயார். விசால் எடுத்திருந்தால் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? இது விஷாலுக்கு நான் விடும் நேரடி சவால். விஷால் இந்த 3 கோடியே 40 லட்சத்தில் கைவைக்கவில்லை என்பதை நிரூபிக்க
வேண்டும். 

இல்லை என்றால் பதவி விலக வேண்டும். விஷால் நிரூபிக்கத் தயாரா? மேலும் பொதுக்குழு வீடியோ, பொதுமக்கள் பார்வைக்கு ஏன் அனுப்பப்பட்டது? பொதுக்குழு விஷயங்கள் நமக்குள்ளேதானே வைத்திருக்க வேண்டும்? 

சங்கத்தின் பொதுக்குழு நடவடிக்கைகளை வீடியோவாக வெளியிட்டது தவறு என்பதையும் சங்க விதிகளின்டி சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சவாலை சந்திக்க விஷால் முன் வருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்! என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.