2011 உள்ளாட்சித் தேர்தலோடு ஒப்பிடும்போது ஊரகப் பகுதிகளில் அதிமுக சரிந்துள்ள நிலையில் திமுக தனது வெற்றியை அதிகரித்துள்ளது.

 
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 9,624 ஊராட்சி தலைவர் பதவிகள், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி  நேற்று தொடங்கி தொடர்ந்துகொண்டு இருக்கிறது.


காலை 10 மணி நிலவரப்படி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2242 பதவிகளையும் அதிமுக கூட்டணி 2022 பதவிகளையும் வென்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி  267 பதவிகளையும், அதிமுக கூட்டணி 235 பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் மாவட்ட கவுன்சிலர் பதவிகள், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறாமல் தொடந்து நடைபெற்றுவருகின்றன. இன்று மாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் பிறகு முழுமையான நிலவரம்  தெரியவரும்.
ஆனால், 2011 உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளில் கிடைத்த முடிவுகள் தற்போது மாறுபட்டுள்ளது. அப்போது எல்லா எதிர்க்கட்சிகளும் தனித்துதான் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் அதிமுக ஊரகப் பகுதிகளில் மொத்தமாக வெற்றியை அறுவடை செய்தது. திமுக குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 91.91 சதவீத பதவிகளைக் கைப்பற்றியது. திமுக  4.58 பதவிகளையும் கைப்பற்றியது. இதேபோல ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 60.16 சதவீத இடங்களைக் கைப்பற்றியது. திமுக 15.56 சதவீத இடங்களை மட்டுமே வென்றது.
ஆனால், தற்போது வெளியாகி உள்ள ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக அணி 50 சதவீத இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக 45 சதவீத இடங்களில் வென்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக அணி 50 சதவீத இடங்களைத் தாண்டி திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக அணி 48 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிவடையாத நிலையில் இந்த எண்ணிக்கை மாறும் வாய்ப்பு உள்ளது. 2011 உள்ளாட்சித் தேர்தலோடு ஒப்பிடும்போது திமுக கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. ஆனால், 2011 தேர்தலோடு ஒப்பிடும்போது அதிமுக வெற்றியை சற்று இழந்துள்ளது தெரியவந்துள்ளது.