பாஜக தலைவர்களை இழிவாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு !! அடுத்தடுத்து குவியும் புகார்கள்… !!!

பாஜக தலைவர்களை நாஞ்சில் சம்பத் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாகவும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜக சார்பில் பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர், நாஞ்சில் சம்பத் சென்னை அடையாறில் அளித்த பேட்டியின்போது,  பிரதமர் நரேந்திரமோடி, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, விஜயகாந்த், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஓபிஎஸ்  உள்ளிட்டோர் குறித்து  இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.. 

இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட பாஜக  தலைவர்,  லோகநாதன், சென்னை பட்டினப்பாக்கம் காவல்  நிலையத்தில் நேற்று மாலை புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், நாஞ்சில் சம்பத், தங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தாக்கி தரக்குறைவாக மிகவும் இழிவாக பேசி வருகிறார் என்றும்,  அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் அவரது பேச்சு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மோதலை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருக்கிறது எனவும் அந்த புகாரில தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்டினபாக்கம் போலீசார் , பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் . 

இதே போன்று நாஞ்சில் சம்பத் மீது பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாஜவினர் புகார் அளித்துள்ளனர். மேலும் அவர் மீது அடுத்த கட்டமாக கோர்ட்டில் வழக்கு தொடரவும்  பாஜ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, பட்டினபாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை பாஜவினர் 150க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். ஏற்கனவே முற்றுகையிட போவதை அறிந்த போலீசார் அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் பாஜவினர் கலைந்து சென்றனர்.