தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று புறநகர் மின்சார ரயில்களை இயக்க  உடனடியாக உத்தரவிட வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம் பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

தமிழக அரசின் சார்பில் செப்டம்பர் 2 ஆம்  தேதியே சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கி தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் ரயில்வே அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியிருப்பதாக முதல்வரின் அறிக்கை கூறுகிறது. அப்படி இருக்க ரயில்வே அமைச்சகம் இன்னமும் மின்சார புறநகர ரயில்களை இயக்க அனுமதி வழங்காதது ஆச்சரியமளிக்கிறது. மற்ற ரயில்களை இயக்க அனுமதி மறுத்து வந்தது மாநில அரசுதான். மாநில அரசு அனுமதிக்காததால் தான் நாங்கள் ரயில் ஒட்டவில்லை என்று ரயில்வேஅமைச்சகம் முன்பு கூறியது. 

ஆனால் மாநில அரசு அனுமதி அளித்த பின்பும் இரண்டு மாதங்களாக ரயில்வே அமைச்சகம் இதன் மீது முடிவு எடுக்காதது ஏன் என்று மக்களுக்கு ரயில்வே அமைச்சகம் விளக்க வேண்டும். எனக்கு கிடைத்த தகவலின் படி ரயில்வே அமைச்சகம் எப்போது மற்ற பயணி  சிறப்பு வண்டிகளில் முன்பதிவில்லா பொது பெட்டிகளை இணைக்கிறோமோ அப்போதுதான் புறநகர ரயில்களை ஓட்ட முடியும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது மாநில அரசுதான். மாநில அரசே அனுமதி வழங்கியபின் இதை முடிவெடுக்காமல் புறக்கணிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.ஏற்கனவே மக்கள் தங்கள் வேலை இடங்களுக்கு வந்து செல்ல நெருக்கடியான பேருந்துகளையும் அல்லது அதிக கட்டணம் கொடுத்து தனியார் வண்டிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். 

தொழிலகங்களும் அலுவலகங்களும் 100 சதம் திறந்த பிறகு இன்னமும் அவர்களின் பொது போக்குவரத்தை நிறுத்தி வைத்திருப்பது கேள்விக்குரியதாகும். ரயில்வே அமைச்சகம் இப்போது நடந்து கொள்வதை வைத்துப் பார்த்தால் லாபமீட்டும் வண்டிகளை மட்டும் 
இயக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. புறநகர் ரயில்கள் வெகு மக்கள் பயன்பாட்டு ரயில்கள் ஆகும்.  தேச நலனின் அடிப்படையில் பார்த்து இந்த வண்டிகளை ஓட்டவேண்டும். மும்பை புறநகர ரயில்களை அதிகம் ஓட்டிட அனுமதி வழங்கப்படுவதாக தெரிகிறது. ரயில்வே அமைச்சகம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு புறநகர் மின்சார ரயில்களை இயக்குவதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.