கேரளாவில் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் 356 இடங்களை பாஜகவிடம் இழந்துள்ளன. ஆக, அங்கு பாஜகவின் கடந்த கால வெற்றியை விட அதிக இடங்களை கைப்பற்றியுள்ளன.

  

கேரளாவிலும், தமிழகத்திலும் எப்படியாவது காலூன்றி விடுவதில் பகீரத பிரயத்தனத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது. கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரிகளின் முன்னணியோ காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணியோதான் தேர்தல்களில் வெல்ல முடியும் என்கிற நிலை தொடர்ந்து வருகிறது.   இந்த ஸ்திரமான நிலையை உடைத்துப் பார்க்க சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் ஒவ்வொருவிதமான அஸ்திரங்களை பாஜக ஏவிவிட்டுப் பார்க்கிறது. கேரள உள்ளாட்சி தேர்தல்களில் 2010ஐ ஒப்பிடுகையில் 2015-ல் ஒருவிதமான முன்னேற்றத்தை பாஜக பெற்றது. அதனால் இந்த முறையிலும் இடதுமுன்னணி, ஐக்கிய முன்னணி எனும் இருபெரும் சக்திகளுக்கு மரண பயத்தை காட்டிவிடலாம் என்கிற மலையான நம்பிக்கையுடன் விதம் விதமான வியூகங்களை பாஜக கையில் எடுத்தது. ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சமமான வாக்குகளை பெற்றதால் கேரள உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக பெரும் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் என பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை.

 

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 5-ஐ இடதுமுன்னணி கைப்பற்றியுள்ளது. 86 நகராட்சிகளில் காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 45 இடங்களைக் கைப்பற்றி வெற்றி கொடி நாட்டியுள்ளது. இடது முன்ணி, காங். கூட்டணி சமமான பலத்தில் இருந்து வந்தன. பாஜகவுக்கு 3-வது இடம் என்று கூட சொல்ல முடியாமல் சொற்ப இடங்களில் முன்னணி வகித்தன. 

6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளன. திருவனந்தபுரம், கொல்லம், கொச்சின், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாநகராட்சிகள் இடதுசாரிகள் வசமாகின. கண்ணூர் மாநகராட்சி மட்டும் காங்கிரஸ் வசமானது. 86 நகராட்சிகளில் காங். தலைமையிலான அணி 45-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுமுன்னணி 35 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதர கட்சிகள் 4 நகராட்சிகளையும் பாஜக 2 நகராட்சிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

பாஜகவின் வேலை கேரளாவில் எடுபடவில்லை என பலரும் கொண்டாடி தீர்க்கின்றனர். ஆனால் பாஜக அங்கு  2015இல் பெற்ற இடங்களைவிட கூடுதலாக 356 இடங்களில் வென்றுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் முன்னேற்றமே. இடதுசாரி கூட்டணி 10,177 இடங்களில் வெற்றி பெற்று ஏற்கெனவே இருந்த 223 இடங்களை நழுவ விட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 8,023 இடங்களில் வெற்றி பெற்று 824 இடங்களை கோட்டை விட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க.கூட்டணி 1600 வெற்றி பெற்றுள்ளது. தற்போது பா.ஜ.க.கூட்டணி மட்டும்தான் 2015ல் பெற்ற இடங்களைவிட கூடுதலாக 356 இடங்களில் வென்றுள்ளது. இடதுசாரி மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணிக்கு 223 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 824 இடங்களையும் இத்தேர்தலில் இழந்துள்ளன. ஆக பாஜகவுக்கு அங்கு பலன் இல்லாமல் இல்லை.