புதிய அரசு பதவியேற்றதை அடுத்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் என்று தலைமை செயலக வட்டாரம் தகவல்கள் கூறுகின்றன. டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு கமிஷனர் ஜார்ஜ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 16 ஆம் தேதி எடப்பாடி தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. கடந்த 11 நாட்களாக தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் சசிகலா தரப்பினர் தங்க வைத்திருந்தனர். அவர்களை அடைத்து வைத்திருந்ததாக ஓ.பி.எஸ் தரப்பினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதுபற்றிய நடவடிக்கை பெரிய அளவில் எடுக்கப்படவில்லை.
இதற்கு காரணம், முக்கிய பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ் உயரதிகாரிகள் பலரது உதவியும் இருந்தது என்று பேசப்பட்டது. இதைதவிர பெண் அதிகாரி ஒருவரும் பெரிய அளவில் அணுகூலமாக இருந்தார்.
புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் தனக்கு வேண்டிய அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் கொண்டு வரவும், வேண்டாதவர்களை மாற்றவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக இரண்டு நாட்களாக தகவல் ஓடும் நிலையில் இன்று அல்லது நாளை அது நடக்கும் என தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையிலும் , ஓபிஎஸ் , தீபா பிரச்சார பயணம் மக்கள் எழுச்சி , அரசு மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மக்களின் மன நிலையை கருத்தில் கொண்டு விரைவாக மாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி நினைக்கிறாராம்.
இந்த மாற்றங்கள் காவல்துறையின் உயரிய பொறுப்பான டி.ஜி.பி அந்தஸ்து அதிகாரிகள் மட்டத்திலேயே கூட இருக்கலாம் என்று காவல்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது டிஜிபி உளவுப்பிரிவு அதிகாரியாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் கூடுதலாகத்தான் சட்டம் ஒழுங்கை கவனித்து வருகிறார்.
ஆகவே அவரை மாற்றிவிட்டு அந்த இடத்திற்கு சென்னை காவல் ஆணையர் ஜார்ஜை நியமிக்க உள்ளதாக தெரிகிறது. இதே போல் விசுவாசத்துக்கு பரிசாக ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு திரிபாதி சென்னை காவல் ஆணையராக மாற்றப்படுவார் என்கின்றனர்.
உளவுத்துறை ஐஜியும் மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக கடந்த திமுக ஆட்சியில் புறநகரில் பவராக இருந்து பின்னர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட அதிகாரிக்கு வாய்ப்புண்டு என்கின்றனர். ஆனால் ஜார்ஜுக்கும் அவருக்கும் ஒத்து போகாது என்ற கருத்தும் ஓடுகிறது.
இதன் மூலம் கமிஷனர் ஜார்ஜின் நெடுநாளைய கனவான சட்டம் ஒழுங்கு டிஜிபி கனவு பலிக்கப்போகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. அதே நேரம் முன்பு போல் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டால் அவர் இரண்டு ஆண்டுகள் ரிட்டயர்மெண்ட் இல்லாமல் (இருந்தாலும் கிடையாது)கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதி இனி இருக்காது என்று கூறுகின்றனர்.
சமீபத்தில் பிரதமர் மோடி அந்த உத்தரவை ரத்து செய்து உள்துறைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆகவே ஜார்ஜ் டிஜிபி ஆனாலும் வரும் செப்டம்பரில் அவர் ஓய்வு பெருகிறார். அதனால் 6 மாத காலம் மட்டுமே அவர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்க முடியும்.
டி.கே.ராஜேந்திரன் முதலில் ஓய்வு பெறுகிறார் , உணவு கடத்தல் தடுப்பு டிஜிபி ராதாகிருஷ்ணன் , அர்ச்சனா ராமசுந்தரம் ஆகியோர் ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார்கள் . செப்டம்பர் மாதம் ஜார்ஜ் ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து டிஜிபி பதவி உயர்வுடன் போட்டியின்றி பேனலுக்குள் வரும் திரிபாதி எளிதாக டிஜிபியாக அதுவும் நேரடியாக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்பார் என சில போலீஸ் அதிகாரிகள் ஆருடம் கூறுகின்றனர்.
விரைவில் இந்த மாற்றங்கள் வரலாம் என தெரிகிறது.
