முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் டிடிவி தினகரன் நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ். ஆதரவாளர், எடப்பாடி அணியினர் இப்போதுதான் விழித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமி அணியினர் இப்போதுதான் விழித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து டிடிவி நீக்கப்பட்ட நிலையில், சென்னை, கிரீன்வேஸ் சாலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி, மாபா பாண்டியராஜன், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

கூட்டத்திற்குப் பிறகு கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் அறிவித்தபடி நடைபெற்று வரும் தர்மயுத்தத்தல், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை, சசிகலா  மற்றும் குடும்பத்தினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால்தான் இரு அணிகளும் இணையும் என்று கூறினார்.

கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே டிடிவி தினகரன், ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர். அவர் கட்சி உறுப்பினர் இல்லை. அவரை துணை பொதுசெயலாளராக, எடப்பாடி அணி ஏற்றுக் கொண்டார்கள். தற்போது அவரை நீக்கி உள்ளதாக கூறி உள்ளார்கள்.

இப்போதுதான் எடப்பாடி பழனிசாமி அணியினர் விழித்துள்ளார்கள். தினகரனோடு சசிகலா குடும்பத்தினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று மீண்டும் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி என்று கூறப்படுவது வெறும் யூகம் மட்டுமே. யூகத்துக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும், 

எங்களது கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே தர்மயுத்தத்தல் வெற்றி பெறுவோம். மறைமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமைச்சர்கள்தான் சொல்கிறார்கள் என்றும் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.