தேரை இழுத்து தெருவில் விட்டவன் திருவிழா கூட்டத்தில் தொலைந்தே போனானாம்!: - கமல்ஹாசன் பற்றி அ.தி.மு.க.வின் பிரகஸ்பதி எழுதியிருக்கும் ட்விட்டர் கமெண்ட் இது. 

ஏன் இந்த கோக்குமாக்கு விமர்சனம்? என்கிறீர்களா!...தமிழகத்தில் அக்கிரம ஆட்சி நடைபெறுவதாக சொல்லி கொதித்தெழுந்து ட்விட்டரில் தாண்டவமாடினார் கமல்ஹாசன். பின் திடீரென ‘மக்கள் நீதி மய்யம்’ எனும் கட்சியை துவக்கினார். ராமநாதபுரம், மதுரை, சென்னை, தூத்துக்குடி, ஈரோடு...என்று ஆங்காங்கே சுற்றுப்பயணம் செய்து சீன்ஸ் பண்ணினார். 

உயர்மட்ட குழுவில் ஆரம்பித்து கட்சியில் சில மட்டங்களை துவக்கி நிர்வாகிகளை நியமித்தார். ’ஆஹா தமிழகத்தில் அரசியல் புரட்சி துவங்கிவிட்டது’ என்று பொதுமக்களில் சிலரும், பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் சிலரும் நம்பினர். அவர் கட்சியில் இணையவும் செய்தனர். 

இந்நிலையில், விஜய் டி.வி.யின் ‘பிக்பாஸ் சீசன் 2’ தயாராகியது. சீசன் 1-ஐ நடத்திய கமல்ஹாசனுக்கு அவர்கள் போன் போட, நேரடியாக அதில் ஐக்கியமாகிவிட்டார் கமல். அவர் துவக்கிய கட்சி அம்போ!வென நடுத்தெருவில் நிற்பதாக இப்போது அ.தி.மு.க.வினர் போட்டு வறுத்துக் கொண்டுள்ளனர்.

அதிலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ‘நம்மவர் பயணம்’ எனும் பிளான் இதுவரையில் ஐந்து முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனிடம் தேதி வாங்கி, இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிர்வாகிகள் போஸ்டர்களும் அடித்து ஒட்டிவிட்டார்கள். ஆனால் கடைசி நேரத்தில் ஒலக நாயகன் லீவு போட்டுவிட்டார். 

இப்படியான காரணங்களால் அக்கட்சியை மற்ற கட்சிகள் வெச்சு செய்து கொண்டிருக்கின்றன. இதில் கமல் கட்சி நிர்வாகிகளுக்கு கடும் மன வருத்தம். 

இந்நிலையில் திடீரென கமல்ஹாசனின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து நிர்வாகிகளுக்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதாவது தமிழகத்தை நூறு மாவட்டங்களாக பிரித்துள்ளாராம் கமல். அத்தனைக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள்.

இவர்கள் அரசியலில் எப்படி செயல்பட வேண்டும்? என்பது பற்றிய பயிற்சி அரங்கம் ஒன்று வரும் 18 மற்றும் 19 தேதிகளில் கோயமுத்தூரில் நடத்தப்பட இருக்கிறதாம். 

இதில் இரண்டாம் நாளில் கமலே கலந்து கொண்டு, தனது கட்சி நிர்வாகிகளுக்கு நேரடியாக பயிற்சி வழங்கிட இருக்கிறார்! என்கிறார்கள். இப்படி ஒர்க்‌ஷாப்பில் வைத்து தனது கட்சி நிர்வாகிகளுக்குள் புதுமை அரசியல் சித்தாந்தங்களை புகுத்தி பெண்டெடுக்க இருக்கிறாராம் கமல். 

ஒர்க்‌ஷாப்பில் அடித்து, வளைத்து புடம் போட்ட பிறகு அரசியல் கில்லிகளாக களமாட இருக்கிறார்கள் எங்கள் நிர்வாகிகள்! என்கிறார்கள் அக்கட்சியினரே. 

பார்க்கத்தானே போறோம் பாஸ்! 

ஆனால் அதேவேளையில் ’நாங்க அப்போவே சொன்னோம்ல. தீவிர அரசியலுக்கு கமல் சரிப்பட்டு வரமாட்டார்னு. அவரு தன்னோட புதுப்படம் மாதிரி பர்ஸ்ட் லுக், டீஸர், டிரெய்லர்னு அப்பப்போ அரசியல்ல எதையாவது வெளியிட்டு தன் ரசிக தொண்டர்களை குஷிப்படுத்தலாம். ஆனால் எந்த காலத்திலும் அவரோட அரசியல் படம் ஹிட் ஆகாதுன்னு! அதை உண்மைன்னு நிரூபிக்கிறார் பாருங்க.

கேரளா, மணிப்பூர்ன்னு இடதுசாரிகள்தான் இப்படி தங்களோட கட்சி நிர்வாகிகளுக்கு ஒர்க்‌ஷாப் நடத்துவாங்க. தமிழ்நாட்டின் அரசியலே தனி லெவல் அரசியல். அதுல இதெல்லாம் எடுபடுமா? நிச்சயம் ஒர்க் அவுட் ஆகாது.” என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.