கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி சட்டமன்ற அதிமுக தலைவராக சசிகலாவை முன்மொழிந்தார். மேலும், சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என அனைத்து எம்எல்ஏக்களும் ஏகமனதோடு தீர்மானம் நிறைவேற்றினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து 7ம் தேதி சசிகலா பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.

இதற்கிடையில், முதல்வர் ஒ.பி.எஸ். தனது ராஜினாமா கடித்ததை, தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், நேற்று இரவு முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் தியானத்தில் இருந்த அவர், சசிகலா மீது சரமாரியாக புகார் செய்தார். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நலையில், தற்போது முதலமைச்சர் பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்களை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலாவை பொது செயலாளராக ஏகமனதோடு அனைவரும் தேர்ந்தெடுத்தீர்கள். அதில் நீங்களும் உள்ளீர்களே என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, சந்தர்ப்ப சூழ்நிலையால், நாங்கள் அதை செய்தோம். இனி அதுபோன்ற தவறு நடக்காது. விரைவில் அதிமுகவில் பொது செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

அதற்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தரவீர்களா என் கேட்டதற்கு, தீபாவுக்கு நிச்சயம் அழைப்பு விடுப்போம். அவருக்கும் இதில் பங்கு இருக்கிறது புரட்சித்தலைவி அம்மாவின் அண்ணன் மகள் என்பதாலும், தொண்டர்களின் ஆதரவு அவருக்கு அதிகரித்து உள்ளதாலும், அவருக்கு அழைப்பு விடுப்போம்.

மத்திய அரசுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நமக்கு ஆதரவு தெரிவித்தால், நாம் மத்திய அரசுடன் இணக்கமாக செல்வோம். இல்லாவிட்டால், நமது பணியை நாமே செய்வோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு திட்டத்தையும், மத்திய அரசு கொண்டு வந்தால், அதை எதிர்ப்போம். ஜெயலலிதாவின், பாதையிலேயே நமது ஆட்சி அமையும்.

தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு வருகிறார்கள். கூடிய விரைவில் அனைவரும், இங்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.