மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க நெருங்கி வந்தாலும் மு.க.ஸ்டாலின் அந்த கட்சியை மிக கடுமையாக எதிர்ப்பதன் காரணம் தெரியவந்துள்ளது.  கலைஞர் மறைவை தொடர்ந்து தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டன. ஒன்று பா.ஜ.க தலைமை அலுவலகமாக கமலாலயம் சென்று ஸ்டாலின் வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை செய்தது. மற்றொன்று கலைஞர் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியது.

மேலும் கலைஞர் மறைவை தொடர்ந்து நாடாளுமன்ற இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் மறைவுக்காக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது வரலாற்றில் அது தான் முதன் முறை. இந்த அளவிற்கு தி.மு.க விவகாரத்தில் பா.ஜ.க அதிக அக்கறை காட்டியது. மேலும் கலைஞர் புகழஞ்சலி கூட்டத்திற்கு பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவே வருவதாக இருந்தது.  ஆனால் வேறு சில காரணங்களால் அமித் ஷாவால் கலைஞர் புகழ் அஞ்சலி கூட்டத்திற்கு வர முடியவில்லை. 

அமித் ஷாவிற்கு பதிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்து சென்றார். இப்படி கலைஞர் மறைவு மற்றும் வாஜ்பாய் மறைவை தொடர்ந்து பா.ஜ.க – தி.மு.க மேலிடத் தலைவர்கள் காட்டிய நெருக்கம் எதிர்கால கூட்டணிக்கான அச்சாரம் என்று கூறப்பட்டது. ஆனால் தான் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் மோடி அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று ஸ்டாலின் திடீரென சூளுரைத்தார். பா.ஜ.கவுடன் மிகவும் நெருக்கம் காட்டி ஸ்டாலின் திடீரென மோடி அரசை விமர்சித்தது அரசியல் நோக்கர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நெருங்கி வரும் பா.ஜ.கவை ஸ்டாலின் கண்டுகொள்ளாதற்காக காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசை தாங்கிப் பிடித்திருப்பது மத்திய அரசு. 

தற்போதைய சூழலில் தமிழக அரசை கவிழ்க்க வேண்டும் என்றால் மத்திய அரசின் தயவு நிச்சயமாக வேண்டும். தமிழக அரசை கவிழ்த்துவிட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே சட்டமன்ற தேர்தல் வர வேண்டும் என்றும் ஸ்டாலின் கருதுகிறார். 

இது குறித்து பா.ஜ.க மேலிடத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் முதலில் ஸ்டாலினுக்கு சாதகமாக சில தகவல்கள் வந்ததாகவும் ஆனால் அதன் பிறகு தமிழக அரசை கவிழ்க்கும் விவகாரத்தில் பா.ஜ.க மேலிடம் பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பா.ஜ.கவுடன் நெருங்கிச் சென்ற ஸ்டாலின் பின்னர் அந்த கட்சியை கடுமையாக தற்போது விமர்சிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே தமிழக அரசை கவிழ்த்துவிட்டு உடனடியாக சட்டமன்ற தேர்தலுக்கு ஏற்பாடு செய்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி குறித்து தி.மு.க பரிசீலிக்கவும் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.