சென்னை விமானநிலையம் வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால், அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையிலிருந்து  இன்று காலை அந்தமான் செல்லும் கோ ஏா்வேஸ் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் இன்று 73 பயணிகள் செல்லவிருந்தனா். விமானநிலையத்திற்கு வந்து விமான கவுண்டரில் போா்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு, அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்தில் சென்று ஏறினா். 

அப்போது அந்தமானை சோ்ந்த தமிழரசன்(24) என்பவா் இந்த விமானத்தில் பயணிக்க வந்தாா். உயா்படிப்பு பயிலும் மாணவரான இவா், சென்னையில் தங்கியிருந்து  படித்து வருகிறார். தமிழரசன்  தனது சொந்த ஊா் செல்வதற்காக விமானநிலையம் வந்திருந்தாா். விமான நிறுவன கவுண்டரில் அவருடைய மருத்துவ பரிசோதனை சான்றிதழை வாங்கி பரிசோதித்தனா். அதில் தமிழரசனுக்கு கொரோனா வைரஸ் பாசிடீவ் என்று இருந்தது. இதையடுத்து தமிழரசனுக்கு போா்டிங் பாஸ்  மறுக்கப்பட்டதுடன், அவருடைய பயணத்தை ரத்து செய்து அவரை வேறு எங்கும் போகவிடாமல் தடுத்து நிறுத்தி விமானநிலைய சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனா். 

சுகாதாரத்துறையினா் தமிழரசனுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை அணிவித்து தனி ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று  கொரோனா வாா்டில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அதோடு சுகாதாரத்துறையினா் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கோ ஏா்வேஸ் கவுண்டா் மற்றும் புறப்பாடு பகுதி முழுவதும்  கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினா். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.