Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு விவகாரத்தால் மத்திய, மாநில ஆட்சி வீழ்ச்சியாகும் - மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

college student-arpattam-join-mkstalin
Author
First Published Jan 12, 2017, 12:50 PM IST

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மாணவர்களின் போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகளின் ஆட்சி வீழ்ச்சியாகும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல், மனித சங்கிலி உள்பட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு அரசியல் கட்சியினரும், சமூக நல அமைப்பினரும், பொதுமக்களும் பெரும்  ஆதரவு கொடத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து, அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசையும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய வகையில் மாநில அரசையும் கேட்டுக் கொள்ளும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பல்வேறு கட்சிகளின் சார்பிலும், பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்தக்கூடிய வீரர்களின் அமைப்புகள் சார்பிலும் தமிழகம் முழுவதும், தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மத்தியில் இணை அமைச்சராக இருக்கக்கூடிய பொன்.ராதாகிருஷ்ணனும், அதேபோல தமிழக பாஜகவின் தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனும் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, நிச்சயமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும், உறுதியாக நடைபெறும் என்று தொடர்ந்து, ஏறக்குறைய சென்ற ஆண்டில் இருந்து இந்த நிமிடம் வரையில் சொல்லிக் கொண்டு இருகிறார்கள். ஆனால் இதுவரையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க முடியாத நிலைதான் இருந்து வருகிறது.

சமீபத்தில் கடந்த 10, 15 நாட்களாக தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கிளர்ந்தெழுந்து, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை பேரணியாக, சாலை மறியலாக, ஆர்ப்பாட்டங்களாக நடத்துகிறார்கள்.

மாணவர்கள் சீறி எழுந்துள்ள இந்த காட்சிகளை பார்க்கும்போது, எனக்கு நினைவுக்கு வருவது, நமது தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில், 1965ம் ஆண்டு நம்முடைய மொழியை காப்பாற்றுவதற்காக ஒரு மிகப்பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று, அந்த போராட்டம் எந்தளவிற்கு வெற்றி பெற்றது என்பது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகி இருக்கின்றது.

இப்போது மாணவர்கள் இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு, இதற்குரிய அனுமதியை தர வேண்டும் என்று போராடும் காட்சியை பார்க்கின்றபோது, உள்ளபடியே மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன். அதேநேரத்தில் அவர்களுடைய உணர்வுகளுக்காக எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

எனவே, புதுக்கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில், என்னுடைய பாராட்டையும், நன்றியையும், எனது ஆதரவையும் தெரிவிப்பதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன்.

இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, வலியுறுத்த விரும்புவது, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை அணுகி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

அதேநேரத்தில் தனியாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், மாணவர்களுடைய போராட்டம், மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும். அப்படி மாணவர்களின் போராட்டம் வெடிக்கும் என்று சொன்னால், நிச்சயமாக நான் கூறுகிறேன், இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், அவர்களுடைய வீழ்ச்சியாகவே அமையும் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios