கரூர் ஆட்சியரை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

கடந்த, 12ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். பின், செய்தியாளர்களிடம் பேசும்போது, மாவட்ட ஆட்சியரை படித்த முட்டாள் எனவும், இனிமேல் ஆய்வு கூட்டத்துக்கு எங்களை அழைக்கமால் இருந்தால், ஆட்சியர் வெளியே நடமாட முடியாது' எனவும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேட்டியளித்திருந்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை  நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும். மேலும், கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில்  ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.