முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட கலெக்டராக இரு ஆண்டுகளாக இருந்த ரோகினி  எடப்பாடியுடன் இணக்கமாகத்தான் இருந்தார். ஆனால் அவர் ஏன் மாற்றப்பட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சேலத்தின் முதல் பெண் கலெக்டரான ரோகினி    முதலமைச்சர் எடப்பாடி இட்ட பணிகளை எல்லாம் செய்து வந்தார். ஆனால் மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடந்த நேரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக அவர் நேர்மையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்துக்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலம் வந்தபோது கோட்டை மைதானத்தில் இருந்தபோது எடப்பாடி வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் வரைக்கும் இரு புறமும் அதிமுக, கூட்டணிக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அது தேர்தல் விதிமுறை என்று சொல்லி அகற்ற ரோகினி கலெக்டர் உத்தரவிட்டார். 

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது, கலெக்டர் ரோகினி. விதிகளை கடுமையாக அமல்படுத்தினார். இதே போல் தேர்தல் முடிவுக்குப் பின் இரண்டடுக்கு பாலம் துவக்க விழாவில் சேலம் திமுக எம்.பி. பார்த்திபனை முறைப்படி அழைக்க வேண்டும் என்பதில் ரோகினி கறாராக இருந்தார். 

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி இப்படி தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் போட்டுக் கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் ரோகினி அதிரடியாக மாற்றப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. தற்போது  ரோஹினி தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.