அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்த தொகையை திரும்ப தர உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்த புகாரில் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு, எம்.ஜி.எம். மருத்துவமனை ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் தந்தை குமாரை அனுமதித்து வெவ்வேறு தேதிகளில் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையிலும், உரிய சிகிச்சை வழங்காததால் ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில்,எந்த விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்ததோடு உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் மீண்டும் 2 லட்சத்து 44 ஆயிரம் செலுத்த வேண்டுமென நிர்பந்தப்படுத்து மொத்தமாக 10 நாட்கள் சிகிச்சைக்கு 7 லட்சத்து 2 ஆயிரத்து 562 ரூபாய் வசூலித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தவிர தன் தந்தையின் மருத்துவ செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற, காப்பீட்டு நிறுவனத்தில் கோர ஏதுவாக மருத்துவ விவரங்களை கேட்ட நிலையில், தனது தந்தையின் மருத்துவ விபரங்களுக்கு பதிலாக வேறு ஒருவரின் சிகிச்சை விவரங்களை வழங்கியதாகவும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியே தமிழக சுகாதாரத் துறை, மாவட்ட ஆட்சியர், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்த தொகையை திரும்ப தர உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன், அரசு தரப்பில் வி.சண்முகசுந்தர் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், எம்.ஜி.எம். மருத்துவமனை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
