கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், விருதுநகர், கோவை ஆகிய பகுதிகளில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு கடந்த இரு தினங்களாக 6 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. சென்னையில் முன்பைவிட பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும், மதுரை, கோவை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அதன்படி, கோவை, ஸ்ரீவில்லிப்புத்தூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் வரும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் 28 கிராமங்களில் தளர்வுகளின்றி முழு முடக்கம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் இதுவரை 486 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பால், மருத்துவம் சார்ந்த பணிகளைத் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 189 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று (ஜூலை 25) மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சியைப் பொறுத்தவரை நேற்று 217 பேருக்கு உட்பட இதுவரை 3,089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அம்மாவட்டத்திலும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.