முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தற்போது வரை பாஜக அங்கீகரிக்கவில்லை. இதே போல் தேமுதிகவும் கூட்டணி குறித்து அடுத்த மாதம் அறிவிக்க உள்ளதாக கூறி வருகிறது. பாமகவும் கூட அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளன. திமுக மிக விரைவில் தனது பிரமாண்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. அதற்கான செயல்திட்டத்தை பக்காவக ரெடி செய்து நிர்வாகிகளுக்கு வழங்கிவிட்டது. கூட்டணியை பொறுத்தவரை திமுக மிகவும் பலமாக உள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுவிட்டன. எத்தனை தொகுதிகள் யார் யாருக்கு என்பதில் மட்டுமே திமுக கூட்டணியில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அதே சமயம் அதிமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரையே பிரச்சனையாக்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டி உறவாடிய பாமக தலைமை, பாஜக தலைமை, தேமுதிக தலைமை சட்டமன்ற தேர்தலில் தாமரை இலை தண்ணீராக நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் மிகப்பெரிய கட்சி. எனவே கூட்டணிக்கு தலைமை வகிப்பதோடு, முதலமைச்சர் வேட்பாளர், தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு போன்றவை எல்லாம் அதிமுகவின் கைகளில் தான் உள்ளது. ஆனால் பாஜக அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அக்கட்சியின் தமிழக தலைவைர் எல்.முருகன் கூறி வருகிறார். இதே போல் தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் நீடித்தாலும் தேர்தலுக்கு இந்த கூட்டணி தொடர்வதை பொதுக்குழுவை கூட்டித்தான் முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்து வருகிறது. பாமகவோ கூட்டணி விவகாரத்தில் அதிமுகவை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ளவில்லை. ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்த பக்கம் செல்லும் முடிவில் இருக்கிறார்.

இப்படி கூட்டணி விவகாரத்தில் அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவுகிறது. ஆனால் தேர்தல் பணிகளுக்கு தேவையான அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கிளைச் செயலாளர்கள் வரை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் கூட்டணியில் குழப்பம் நீடிப்பதால் தேர்தல் பணிகளை தொடங்குவதில் அதிமுக நிர்வாகிகளுக்க இடையூறு ஏற்பட்டுள்ளது. பூத் ஏஜென்டுகள் நியமனத்தில் பாஜக, தேமுதிக, பாமக நிர்வாகிகளை சேர்ப்பதா? இல்லையா? என்பது தான் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் முன் தற்போது ஏற்பட்டுள்ள மில்லியன் டாலர் கேள்வி.

இப்படி அடுக்கடுக்கான சந்தேகங்களுடன் அதிமுக தலைமையை நிர்வாகிகள் நச்சரித்து வருகின்றனர். மேலும் கூட்டணி விவகாரத்தில் பாஜகவுடன் தேவை இல்லாமல் அதிமுக நெருக்கம் காட்டுவதாகவும் அந்த கட்சிக்காக மிகவும் இறங்கி செல்வதாகவும் சில நிர்வாகிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தேமுதிகவும் கூட்டணி விவகாரத்தில் அதிமுகவை மதிக்காமல் பேசி வருவதும் அதிமுக தலைமையின் கவனத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்தே சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். கூட்டணி விவகாரத்தில் இறுதி முடிவை விரைவில் தெரிவிக்கவில்லை என்றால் வேறு கூட்டணியை பாருங்கள் என்று தேமுதிக, பாமகவிற்கு தகவல் சொல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணிக்கு அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதால் மூத்த அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் விரைந்து முடிவை அறிவிக்க வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.