மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி களேபரங்கள் அரசியல்கட்சிகளை சூழ்ந்து வருகின்றன. காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்து விட்டு பாஜகவுக்கு பாராமுகம் காட்டி வந்த திமுகவுக்கு இப்போது வரை வலைவிரித்து வரும் மோடிக்கு மு.க.ஸ்டாலின் உறுதியான முடிவை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். 

நேற்று தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி ''20 ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய அரசியலில் வெற்றிகரமான கூட்டணி அரசியலை அடல் பிகாரி வாஜ்பாய் ஏற்படுத்தினார். கூட்டணியைப் பொருத்தவரை, பழைய நண்பர்களை வரவேற்கிறோம்.  அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கதவுகள் திறந்தே இருக்கின்றன. கூட்டணியை பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியை பாஜக பின்பற்றும். கூட்டணி அமைப்பது குறித்து திறந்த மனதுடன் இருக்கிறோம். மக்களுடன் அமைக்கப்படும் கூட்டணியே வெற்றி பெறும்” என்று கூறி இருந்தார். 


வாஜ்பாய் காலத்தில் பாஜக- திமுகவுடன் கூட்டணி ஏற்பட்டதால், மோடியின் இந்த அழைப்பு திமுகவுக்கு விடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசு எழுந்தது. இதற்கு விளக்கமளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘’ பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை. பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல, அவர் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. மோடி ஆட்சியில் தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. நாட்டின் பன்முகத்தன்மையை கெடுத்து விட்டார்’ என விளக்கமளித்துள்ளார்.

 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணியை ஏற்கெனவே உறுதி செய்து விட்டது. இந்த நிலையில் அவர் பாஜகவுக்கு உறுதியான முடிவை தெரிவித்துள்ளார்.