வடமாநிலங்களில் ஆழ, அகல கால் பதித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, தென்னிந்தியாவில் தனது சிறகுகளை விரிக்க முயன்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் அது எடுத்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ள அதேநேரத்தில் தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அது சாத்தியப்படவில்லை. வரும் காலங்களில் அவைகளை சாதிக்க பாஜக பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில்  வெற்றிக்  கூட்டணியில் இடம்பெற்று, எப்படியாவது சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும்  பாஜகவையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும், நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, புதிய வேளாண் சட்டம், சுற்றுச்சூழலியல் தாக்க மதிப்பீடு உள்ளிட்ட விவகாரங்களில் கடுமையாக  எதிர்க்கும் கட்சியாக திமுக இருந்து வருகிறது. 

அதைபோல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள கட்சியாகவும் திமுக கருதப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் பாஜக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னைக் கடுமையாக விமர்சித்து வரும் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் கூறிவரும் நிலையில், அதற்கான வாய்ப்பு  இருப்பதாகவே பாஜகவின் புதிய தேசிய பொதுச் செயலாளரும், தென் மாநிலங்களுக்கான பாஜக பொறுப்பாளருமான சி.டிரவிகூறியுள்ளார். 

ஏசியாநெட் ஆங்கில இணைய தளத்திற்கு சி.டி ரவி பிரத்தியேகமாக அளித்துள்ள பேட்டியில் தமிழக அரசியல் குறித்தும், பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்தும் கூறியிருப்பதாவது:-

கேள்வி:  தென்னிந்தியாவின் பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள தங்கள் முன் சவாலான பணிகள் இருக்கிறது, தென்னிந்தியாவில் கட்சியின் வளர்ச்சியை எவ்வாறு உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள், உங்கள் உத்தி என்னவாக இருக்கிறது?

பதில்: எங்கள் கட்சி நாடு முழுவதும் வியாபித்து இருக்க வேண்டும் என்பதே எங்களிட் நீண்ட கால திட்டம். நாடு முழுவதும் கட்சி வளரவேண்டும், நாங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய விரும்புகிறோம், ஒருபோதும் அரசியல் தீண்டாமையை பாஜக நம்பியதில்லை, சமூக அல்லது அரசியல் தீண்டாமையை நாங்கள் நம்பவில்லை, அனைத்து தரப்பு  மக்களுடனும் கைகோர்த்து முன்னேற  விரும்புகிறோம். இது போன்ற முயற்சிகள் காரணமாக பல மாநிலங்களில் பாஜகவின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களை பொருத்தவரையில் கர்நாடகாவை தவிர இன்னும் பிற மாநிலங்களில் பாஜக வளரவேண்டும், தெலுங்கானா,ஆந்திரா தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் லட்சத்தீவு போன்ற மாநிலங்களில் நாம் இன்னும் வளர வேண்டும். இம் மாநிலங்களில் ஒரு பிரதான கட்சியாக வளர வேண்டும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர வேண்டும், எங்கள் பொறுப்புகள் மாறக்கூடும், ஆனால் இலக்கு ஒன்றுதான் எனக் கூறியுள்ளார்.

 

கேள்வி: பாஜக இந்தி மொழி திணிப்பதாக தமிழக மக்கள் பாஜகவை விமர்சிக்கிறார்கள், பாஜகவை தமிழர்களுக்கு எதிரான கட்சியாகவே தமிழர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் தமிழக வாக்காளர்களை எவ்வாறு சமாதானப்படுத்த போகிறீர்கள்? 

பதில்: அது அப்படி இல்லை ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமையின் அடிப்படையில் கவனம் செலுத்துவது, அம்மாநிலத்தில் பொது நலனை பாதுகாப்பதோடு, தேசிய நலனையும் அம்மாநிலத்தில் ஊக்குவிப்பது என்ற அடிப்படையில் பாஜக செயல்படும். ஒருபோதும் பிராந்திய நலன்களை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம், புதிய கல்விக் கொள்கையில் அனைத்து மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம். எனவே மாநில மொழிகளை புறக்கணிக்கிறோம் என்ற குற்றச்சாட்டுக்கே இடமில்லை. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் அங்கு தமிழ் பெருமை, கர்நாடகாவில் கன்னட பெருமை, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தெலுங்கு பெருமை, கேரளாவில் மலையாள பெருமை, ஆனால் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் அனைவரும் ஒரு தாயின் குழந்தைகள் என்பதை மனதில் வைத்து நாங்கள் பணியாற்றுவோம் எனக் கூறியுள்ளார். 

 

கேள்வி: தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த என்ன உத்தி வைத்துள்ளீர்கள், அப்படியான திட்டம் உங்களிடம் இருக்கிறதா? 

பதில்: எதிர்வரும் வாரங்களில் கூட்டங்களை நடத்தி பிராந்திய பிரச்சனைகளை முதலில் ஆராய்வோம், அதில் எந்த பிரச்சனை தேர்தலில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதை அளவிடுவோம், அதன் பிறகு எங்களின் பலத்தையும், பலவீனங்களையும் பகுப்பாய்வு செய்வோம், எங்களுக்குள்ள வாய்ப்புகளையும் நாங்கள் மதிப்பீடு செய்வோம். பின்னர் அதை நாங்கள் இறுதி செய்வோம் எனக் கூறியுள்ளார்.

 

கேள்வி: உங்கள் கட்சி இன்னும் தமிழகத்தில் ஒரு வலுவான தளத்தை நிறுவவில்லை தமிழகத்தைப் பொருத்தவரையில் அதிமுக-பாஜக என்பது இயற்கை கூட்டணி என வர்ணிக்கப்பட்டது, அதே நேரத்தில் திமுகவுடன் இணைவது குறித்தும் பாஜக பரிசீலித்து வருகிறதா?

பதில்: கர்நாடகாவிலும் ஆரம்பத்தில் இதே சூழ்நிலையை எதிர்கொண்டோம், வாக்காளர்கள் ஜனதாதளம் மற்றும் காங்கிரஸுக்கு வாக்களிப்பவர்களாக இருந்தனர். ஆனால் கர்நாடகத்தில் நிலைமை மாறியிருக்கிறது. தமிழகத்திலும் கட்சியை நிலை நிறுத்தும் வரை இதே நிலைமை இருக்கும், ஆனால் நிலை நிறுத்திவிட்டால்  பலன்களை அறுவடை செய்வோம். அதுபோலவேதான் தமிழகத்திலும், தேசத்தின் நலன்களுக்காகவும், தமிழகத்தின் நலன்களுக்காகவும் பாஜக திறந்த நிலையில் இருக்கிறது.  எங்கள் விருப்பங்களையும் திறந்தே வைத்திருக்கிறோம். பாஜக எந்த கூட்டணிக்கும் வேண்டுமானாலும் சொல்லலாம் எனக் கூறியுள்ளார். 

 

கேள்வி: அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினிகாந்த்தை தமிழக மக்கள் இன்னும் வெளிமாநிலத்தவராகவே கருதுகின்றனர். இன்னும் கூட தமிழக மக்கள் அதிமுக-திமுக வையே சார்ந்துள்ளனர். பாஜகவும் வடமாநிலக் கட்சியாகவே கருதப்படுகிறதே?

பதில்: அப்படி பேசும் நபர்களும் இருக்கிறார்கள், ஆரம்பகட்டத்தில் ஜெயலலிதாவை கூட அவர் மாண்டியாவை சேர்ந்தவர் என்று மக்கள் கூறினர். ஆனால் அவர் 4 முறை முதல்வர் ஆனார்,  கருணாநிதி ஒரு தெலுங்கர் என்றும், எம்ஜிஆர் ஒரு மலையாளி என்றும் விமர்சிக்கபட்டனர் ஆனால் ஆவர்கள் தமிழகத்தின் தலை சிறந்த முதலதமைச்சர்களாக கோலோச்சினர். ஒருபோதும் மக்கள் இது போன்ற விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை. அரசியலில் எப்போதும்  இது போன்ற விமர்சனங்களை எழுப்புவார்கள்தான். அதே நேரத்தில் எம்ஜிஆர்,ஜெயலலிதா, கருணாநிதி என அனைவருமே தமிழ் பெருமையை பிரதிநிதித்துவப்படுத்தினர் இதுதான் இந்நாட்டின்அழகு. கன்னட எழுத்தாளர் டி.வி குண்டப்பாவின் தாய் மொழி தமிழ், ஆனால் அவர் கன்னடத்தை பிரதிநிதித்துவபடுத்தினார், இவ்வாறு சி.டி ரவி கூறினார்.