அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெலலிதாவின் உடல்நலம் குறித்து காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் கட்சி தலைவர்கள் பலர் மருத்துவமனை சென்று விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை மதிமுக பொது செயலாளர் வைகோ, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அப்போலோ மருத்துவமனை சென்றனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார்.

மருத்துவமனை சென்ற தமிழிசை, பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர், மிகவும் துணிச்சலான முதலமைச்சர் ஜெயலலிதா, விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறினார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக அவர் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற்று மீண்டும் பணிகளைத் தொடங்குவார் என்றும், துணிச்சலான முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தார்.