CM to support mersal
மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசிய காட்சியை நீக்க பாஜக வலியுறுத்துவது தவறானது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளி வந்த படம் மெர்சல். இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.
மெர்சல் திரைப்படம் வெளிவந்த நிலையில், படத்தில் இடம் பெறும் வசனங்களால் மேலும் சிக்கலை சந்தித்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. குறித்தும், பணமதிப்பிழப்பு குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த கருத்து பாஜக மத்தயில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இல.கணேசன் உள்ளிட்ட பலர், மெர்சல் படத்தில் இடம் பெறும் வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்தவர்களும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்கும் விதமாக பாஜக செயல்படுவது மெர்சல் படம் மூலம் வெளிப்படுகிறது என்று கூறினார்.
சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு தனிப்பட்ட அதிகாரம் இருப்பதுபோல், பொது விமர்சனம் செய்ய ஊடகங்களுக்கும் அதிகாரம் உள்ளது. மெர்சல் படத்தில் மருத்துவம் குறித்து விஜய் பேசிய காட்சியை நீக்க பாஜக வலியுறுத்துவது தவறானது என்றும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
