துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீதுள்ள திரையில் தமிழ்நாடு பற்றிய காட்சி படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீதுள்ள திரையில் தமிழ்நாடு பற்றிய காட்சி படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

துபாயில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 25 முதல் மார்ச் 31-ம் தேதி வரை அங்கு தமிழ்நாடு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, சர்வதேச முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். இந்த எக்ஸ்போ கண்காட்சியில் உள்ள தமிழ்நாட்டிற்கான அரங்கை நேற்று திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில் சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், துபாயில் உள்ள 2217 அடி உயரம் கொண்ட உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு. பண்பாடு. செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்வுகளின் போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப. வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, இஆப. தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.