Asianet News TamilAsianet News Tamil

கவர்னரை அழைக்காதீங்க.! அதிகாரத்தை கையிலெடுங்க..! முதல்வரை உசுப்பி, நட்புக்கு வேட்டு வைக்கும் அமைச்சர்கள்?!

"ஏற்கனவே பழையை கவர்னர் சென்னாரெட்டியோடு சண்டை போட்டிருந்த மாஜி முதல்வர் ஜெயலலிதா இப்படித்தான் செஞ்சாங்க.."

CM Stalin rejects ideas of some Ministers
Author
Chennai, First Published Jan 15, 2022, 5:17 PM IST

யார் கண் பட்டதோ தெரியவில்லை தமிழக ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான நல்ல நட்பில் நறுக்கென ஒரு வேட்டு வைப்பதற்கான வேலையை சிலர் துவக்கியுள்ளனர்! என்று தலைமை செயலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்வரை கவர்னர் அதிருப்தியாக பார்க்குமளவிலான யோசனை ஒன்றை அமைச்சர்களே ஸ்கெட்ச் போட்டு  தந்திருப்பதாக இதில் பேசப்படுவதுதான் ஹாட் விவகாரமே.

விரிவாக சொல்லுங்க பாஸ்!...

அதாவது தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித், தி.மு.க. ஆட்சி அமைந்த சில மாதங்களில் மாற்றப்பட்டார். அவரிடத்தில் ஆர்.என்.ரவி வந்து அமர்ந்துள்ளார். மிகவும் நுணுக்கமான அறிவாற்றலும், செயல்பாடும், அரசியல் பார்வையும் உடையவர் ரவி. அதனால் தமிழக அரசுக்கு செக் வைப்பதற்காகவே இவரை டெல்லி அனுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். எப்படி புதுச்சேரியில்  நாராயணசாமி அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்கும் இடையில் பெரும் மோதல்கள் நடந்ததோ அதற்கு இணையான சம்பவங்கள் தமிழகத்திலும் நேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

CM Stalin rejects ideas of some Ministers

ஆனால் இவற்றுக்கெல்லாம் எதிர்மறையாக, கவர்னர் ரவியும், முதல்வர் ஸ்டாலினும் நெருக்கமான நண்பர்களாகவே வலம் வர துவங்கினர். டெல்லிக்கு  அலுவல் ரீதியாக செல்லும் போதெல்லாம் தமிழக அரசு நிர்வாகத்தை பாராட்டியே பேசினார், ரிப்போர்ட் தந்தார் கவர்னர். இது முதல்வரை நிம்மதியாக இயங்க வைத்தது. இதற்கு கைமாறாக கவர்னருக்கு ஒப்பில்லாத எந்த விஷயத்திலும் வலிந்து செயல்படாமல் அமைதி  காத்தது தி.மு.க. அரசு.

ஆனால் நீட் விவகாரம் மட்டுமே தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான ஒரு முரண் ரேகையாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக சட்டமன்றம் நடந்தபோது கூட அதில் முதல் நாள் ஆளுநர் உரையில், ஸ்டாலின் அரசை வாயாற புகழ்ந்தார் கவர்னர். இவ்வளவு ஏன் ‘நீட்தேர்வுக்கு விலக்கு வேண்டும்! என்பதை தொடர்ந்து இந்த அரசு வலியுறுத்தும்’ என்று கவர்னர் பேசியபோது அகமகிழ்ந்தார் முதல்வர். ஆனாலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு வழங்கப்பட்ட மசோதாவை கவர்னர் இன்னமும் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பதில் முதல்வருக்கு கடும் வருத்தம்தான்.

இதை கவனித்துவிட்டு ‘கவர்னர் பாராட்டுகிறார், ஆனாலும் கிள்ளவும் செய்கிறார்’ என்று போட்டுக் கொடுத்தனர் சில சீனியர் அமைச்சர்கள். அதேப்போல், நீட் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க மூன்று நாட்கள் முயன்று தோற்றனர் தமிழக எம்.பி.க்கள். இதிலும் முதல்வருக்கு கடும் கோபம். இருந்தாலும் வரும் 17-ம் தேதியன்று அமித்ஷா டைம் கொடுத்துள்ளார். ஆனாலும், தி.மு.க.வின் ஆதங்கம் அடங்கவில்லை. ‘நீட் விவகாரத்தை வைத்து நம்மை டார்ச்சர் செய்யும் மத்திய அரசுக்கு பதிலடி தர வேண்டும்.’ என்று கருவுகின்றனர்.

இதற்கு ஒரு யோசனையை ஸ்கெட்ச் போட்டு முதல்வரிடம் கொடுத்துள்ளனராம் சீனியர் அமைச்சர்கள். அதன்படி, எதிர்வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று கொடியேற்றும் விழாவுக்கு மத்திய அரசின் பிரதிநிதியாக தமிழகத்தில் இருக்கும் கவர்னரை அழைக்க வேண்டாம்! என கூறியுள்ளவர்கள். “நீங்களே கொடியை ஏத்துங்க முதல்வரே. நீங்கள் அப்படி செய்தால், இந்தியா முழுக்க அரசியல் அரங்கம் உங்களை கவனிக்கும். ஒன்றிய அரசுக்கு எதிரான உங்களின் கெத்தாக இது அமையும்.” என்று சொன்னார்களாம். உடனே முதல்வர் ‘ இது தப்பில்லையா?’ என்று கேட்டாராம். அதற்கு “இல்லை முதல்வரே. ஏற்கனவே பழையை கவர்னர் சென்னாரெட்டியோடு சண்டை போட்டிருந்த மாஜி முதல்வர் ஜெயலலிதா இப்படித்தான் அவங்களே கொடியை ஏத்துனாங்க. அது இந்தியா முழுக்க பரபரப்பாச்சு. பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் ஓ.பன்னீர்செல்வமே கொடியை ஏத்தினார். அதனால் நீங்கள் ஏற்றுவதில் எந்த பாதகமும் இல்லை. கொடி ஏற்றும் அதிகாரத்தை நீங்களே கையில் எடுத்து நடத்துங்கள்.” அப்படின்னு சொல்லியிருக்காங்க.

CM Stalin rejects ideas of some Ministers சென்னா ரெட்டி - ஜெயலலிதா

ஆனால் அதேவேளையில் வேறு சில அமைச்சர்களோ “எதற்கும் யோசிச்சு முடிவெடுக்கலாம். 17ம் தேதி அமித்ஷா என்னதான் சொல்கிறார்னு கவனிக்கலாமே தலைவரே” என்று சாந்தப்படுத்தியுள்ளனர். அதுதான் சரி! என்று முடிவெடுத்த முதல்வரும் “கவர்னருக்கும், நமக்கும் இடையில் எந்த மோதலுமில்லை. மிக பண்பாக நடக்கிறார். அதை நாமே அசைத்துப் பார்க்க வேண்டாம். நீட் விஷயத்தில் உள்துறை அமைச்சரின் மூவ்மெண்ட்ஸை பார்த்து முடிவெடுப்போம். அதுவரைக்கும் இதை யாரும் டிஸ்கஸ் பண்ண வேண்டாம்.” என்று அழுத்தமாக ஆர்டர் போட்டுள்ளார்.

ஆனாலும் ஸ்கெட்ச் போட்ட சீனியர்கள் அமைதியாகாமல், இதை சாதித்துக் காட்டி, பா.ஜ.க. அரசுக்கு எதிரான துணிச்சலான தலைவராக ஸ்டாலினை காட்டிட முனைகிறார்களாம்.

ஹும், இது எங்கே போய் முடியுமோ!?

Follow Us:
Download App:
  • android
  • ios