ஸ்பாட்டுக்கு போய் அவங்களுக்கு என்ன வேணுமோ செஞ்சு கொடுங்க.. அமைச்சருக்கு உத்தரவிட்டு நிவாரணம் அறிவித்த முதல்வர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பிளைவுட்ஸ் ஏற்றி வந்த லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பிளைவுட்ஸ் ஏற்றி வந்த லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் சரோஜா, ௧/பெ. நாச்சிமுத்து (50), பூங்கொடி க/பெ. கோவிந்தராஜன் (48), கிட்டுசாமி, த/பெ.நாச்சி (45) மற்றும் செல்வி. தமிழரசி, த/பெ.குணசேகரன் (17) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களை உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி, த/பெ.குமரன் (50), வளர்மதி, க/பெ.சுதாகரன் (26), இந்துமதி, க/பெ.குணசேகரன் (23) மற்றும் காயத்ரி, த/பெ.சரவணன் (12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.