கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் துக்ளக் பத்திரிகை விவகாரத்தில் ரஜினி கருத்துக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை நேரடியாகவே கடிந்து கொண்டார் எடப்பாடியார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிமுக பேச்சாளர்கள் யாரும் ரஜினிக்கு ஆதரவாகவோ எதிராகவோ கருத்து தெரிவிக்க கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஜினி விஷயம் என்றால் அமைச்சர்கள் மிகவும் கவனமாக செயல்பட்டு வந்தனர். ஆனால் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக பேசி வந்தார்.

அதிலும் பெரியார் விஷயத்தில் ரஜினி இந்துக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளதாகவும் இந்த விஷயத்தில் ரஜினியை ஆதரிக்க வேண்டியது இந்துக்களின் கடமை என்றும் மிகத் தீவிரமாக ரஜினி ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். தொடர்ந்து எதற்கும் கட்டுப்படாமல் ரஜினிக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையிலும் சில கருத்துகளை ராஜேந்திரபாலாஜி பேசினார். இதனால் பெரும் சர்ச்சை உருவானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த ராஜேந்திர பாலாஜியிடம் அமைச்சர்கள் சிலர் முகம் கொடுத்து பேசவில்லை என்று சொல்கிறார்கள். மேலும் அலுவல் ரீதியிலான சம்பிரதாயங்கள் முடிந்த நிலையில், அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது மூத்த அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்துள்ளனர். இதற்கு ராஜேந்திர பாலாஜி தனது வழக்கமான பாணியில் பதில் அளித்ததாக கூறுகிறார்கள். இதனால் அமைச்சரவை கூட்டத்தில் காரசார விவாதம் நடந்ததாக சொல்கிறார்கள். முதலமைச்சர் தலையிட்டு சலசலப்பை அடக்கிய நிலையில் மாலையில் ராஜேந்திர பாலாஜியை தனியாக அழைத்து முதலமைச்சர் பேசியதாக கூறுகிறார்கள்.   அப்போது எதற்காக இந்த அளவிற்கு தீவிரமாக ரஜினியை ஆதரிக்க வேண்டும் என்று எடப்பாடியார் டென்சன் ஆனதாக சொல்கிறார்கள். மேலும் ரஜினியை ஆதரித்து பேசவா நாம் கட்சி நடத்துகிறோம் என்றும் எடப்பாடியார் சிடுசிடுக்க,தான் இந்துக்களுக்கு ஆதரவாகவே பேசியதாக ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் இனிமேல் ரஜினி குறித்து பேச வேண்டாம் என்று கூறி ராஜேந்திர பாலாஜியை முதலமைச்சர்அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக ராஜேந்திர பாலாஜி அமைதி காத்து வருகிறார். இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுத்தால் இந்துக்களுக்கு ஆதரவாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை என்று விஷயம் வில்லங்கமாகிவிடும் என்பதால் தான் அதிமுக மேலிடம் அமைதி காப்பதாக சொல்கிறார்கள்.