இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தமிழ்நாட்டில் இருக்கும் மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உலகளவில் இந்த நிகழ்வு கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில் மாமல்லபுரம் சந்திப்பிற்காக தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் சாலைகள் மேம்படுத்தப்பட்டு முக்கிய இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு புதுப்பொலிவாக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

இதனிடையே இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பிற்கு தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக இரவு,பகலாக உழைத்த காவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாரம்பரியம் மற்றும் பண்பாடுமிக்க தமிழகத்தை குறிப்பாக சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தை இந்திய-சீன நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக மக்களின் சார்பில் முதற்கண் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி, இன்று உலக தலைவர்களுக்கு இடையே உயர்ந்த தலைவராக விளங்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த செய்கையின் மூலம் தமிழகத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி உள்ளார். இது உலகநாடுகளின் பார்வையை தமிழகம் பக்கம் திருப்பி உள்ளது.

இந்த இரு பெரும் தலைவர்களுக்கு (மோடி, சீனஅதிபர் ஜின்பிங்) உற்சாகமான வரவேற்பு அளித்த தமிழக மக்களுக்கு, குறிப்பாக மாணவச்செல்வங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. நம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் இருபெரும் தலைவர்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்வித்த கலைஞர் பெருமக்களுக்கும் எனது நன்றி. இந்த கலைநிகழ்ச்சிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அமைச்சர்களுக்கும் எனது நன்றி. சிறப்பான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எனது நன்றி.

அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்த வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ் சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.