மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் 174-வது பிரிவின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நடந்து கொண்டிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தொடரை, பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். பின்னர், ஆளுநர் தன்கர், மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைத்ததாக விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கு வங்க சட்டமன்றம் ஆளுநரால் முடக்கப்பட்டதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். தனது, ட்விட்டர் பதிவில், ஒரு மாநிலத்தின் தலைவராக உள்ள ஆளுநர், அந்த மாநிலத்திற்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை கொடுப்பதுதான் ஜனநாயகத்திற்கு அழகு எனக்கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பை நிலைநிறுத்த ஆளுநர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவுக்கு மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், உண்மையை ஆராயாமல் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கருத்துகள், கடுமையானதாகவும், மனதை புண்படுத்தும் வகையிலும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சட்டப்பேரவையை ஒத்திவைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுருந்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பாஜக அல்லாத மாநிலங்களின் ஆளுநர்களால் அரசியலமைப்புச் சட்ட மீறல்கள் மற்றும் வெட்கக்கேடாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் குறித்த தனது கவலையையும் வேதனையையும் பகிர்ந்து கொள்ள மம்தா பானர்ஜி அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டத்தை அவர் பரிந்துரைத்தார். மாநில சுயாட்சியை நிலைநாட்ட திமுகவின் உறுதிப்பாட்டை நான் உறுதியளித்தேன். டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு நடைபெறும் என்று பதிவிட்டுள்ளார்.

